முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் உடல் நலக்குறைவில் பல்வேறு சந்தேகங்கள்
இருப்பதால், அதுகுறித்து, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ராஜ்யசபா
எம்.பியும், சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பா
தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா கூறியதாவது:
மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதாவே வந்து ஆட்சி செய்ய வேண்டும். அதை தான்
அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். ஆனால், எனக்கு கொலை மிரட்டல் விடுத்த
நபரான சசிகலா நடராஜன், அதிமுகவின் துணை பொதுச்செயலர் ஆக வேண்டுமென
பேசிவருகிறார்.
அதிமுகவையும், தமிழக ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா நடராஜன் மற்றும் அவரது
குழு சதி செய்து, செயல்பட்டு வருகிறது.
இவர்களாக போய் உட்கார்ந்துவிட்டனர்
சசிகலா நடராஜன் கோஷ்டி கோடிகணக்கில் பணம் வைத்துள்ளது, இது குறித்து சிபிஐ
விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஒரு நோயாளிக்கு அருகே யாரும் இருக்க
வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. டாக்டர்கள்தான் நோயாளிக்கு பொறுப்பு.
ஆனால் சசிகலா கோஷ்டியோ, தானாகவே போய் முதல்வரிடம் உட்கார்ந்து கொண்டு
இருக்கிறார்கள்.
ஸ்டாலின், ராகுலுக்கே அனுமதியில்லை
பெரிய, பெரிய தலைவர்கள் எல்லாம், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோதும்
ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஸ்டாலின், ராகுல் காந்தி என
அனைவருமே அப்படியே திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
வெளியே வாருங்கள்
எனவே, அதிமுகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் உடனடியாக வெளி வர
வேண்டும். கட்சியை காப்பாற்ற முன் வர வேண்டும். என்னிடம் சில தலைவர்கள்
பேசிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் அதிருப்தியை கூறுகிறார்கள். இனியாவது
அவர்கள் தைரியமாக வெளிப்படையாக வெளியே வந்து பேச வேண்டும்.
கையெழுத்தை சோதனை செய்யுங்கள்
தமிழகம் சார்பில் அனுப்பபடும் கடிதத்தில் இருக்கும் முதல்வரின்
கையெழுத்தின் உண்மை தன்மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். முதல்வர்
கையெழுத்தில்லாமல் உள்ளாட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானால், அதை தேர்தல்
ஆணையம் பரிசீலிக்க கூடாது.
சதி உள்ளது
முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதன்
பின்னணியில் சதி இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்பது
பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
No comments:
Post a Comment