உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சார்பில், காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து இந்த மாதம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 10 நாட்களுக்குள் சுமார் 13 டிஎம்சி என கணக்கிட்டு தண்ணீர் திறக்க கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதேநேரம், தமிழகத்திற்கு, கூடுதல் தண்ணீர் தேவை என்றால் காவிரி கண்காணிப்பு குழுவை 3 நாட்களுக்குள் நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு தமிழக அரசு இ-மெயில் வாயிலாக காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பர் 30ம் தேதிக்குள் 134 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுபடி சுமார் 13 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது இருப்பில் உள்ள நீரும், கர்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரும் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு 60 டிஎம்சி தண்ணீர் உடனடியாக தேவை. எனவே உடனடியாக காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்டி விவசாயத்திற்கு தேவையான 60 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment