ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாளை ராம்குமாருக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இவரது தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்கிறது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ம் தேதி புழல் சிறையில் மரணமடைந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
ராம்குமார் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இரு விதமான முடிவுகளை தெரிவித்தனர். இதையடுத்து 3வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்தார். அவர், எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை நடத்தி விடவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த பரமசிவம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் விசாரிக்க முடியாது என்றும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை அணுகும்படியும் அறிவுறுத்தினார். இதையடுத்து பரமசிவம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ராம்குமார் பிரேத பரிசோதனையின்போது தங்களது தரப்பு தனியார் மருத்துவரை கண்காணிப்பதற்காக அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், வக்கீல்கள் எஸ்.ரஜினிகாந்த், பி.ராமராஜ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு உடனடியாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்றனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு செப்டம்பர் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி பரமசிவத்தின் வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாளை ராம்குமாருக்கு பிரேத பரிசோதனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி கிருபாகரன் உத்தரவின் பேரில் ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்கிறது. இதை முன்னிட்டு இன்று சென்னை வரும் குப்தா மாலை ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆலோசனை நடத்துகிறார். இவர் ஏற்கனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த திருப்பூர் மாணவர் சரவணன் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment