கோவையில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களுக்கு போலீசாரின் அலட்சியம்தான்
காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:
கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரின் படுகொலையும், அதனைத் தொடர்ந்து
நடந்த வன்முறை வெறியாட்டங்களும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்து
முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டது மிகுந்த
கண்டனத்திற்குரியது.
பூசல்களை அனுமதிக்க முடியாது
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலையும், கருத்தியலையும் அதன்வழியேதான்
எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, அதனை விடுத்து அவர்களைக் கொலை செய்வது என்பதை
ஒருபோதும் ஏற்க முடியாது.. சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த தமிழ்
மண்ணில் சாதி, மதத்தின் பெயரால் நடைபெறும் பூசல்களையும், வன்முறைகளையும்
ஒருகாலும் அனுமதிக்க முடியாது.
போலீஸ் மெத்தனப் போக்கு
கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காவல்துறையினர்
மெத்தனப்போக்கோடு செயல்பட்டதும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
சசிகுமாரின் மரணம், மதக்கலவரம் நடந்தேறிய கோவை மண்ணில் எத்தகையத் தாக்கத்தை
உருவாகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும்
நடைபெறாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர்
எடுத்திருந்தால் இத்தகையை விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்காது.
தவிர்த்திருக்கலாம்
சசிகுமாரின் மரணம் மதரீதியான வன்முறையை உருவாக்கக்கூடும் என்பதைக்கூடவா
உணராதிருந்தார்கள் காவல்துறையினர்? என்பதுதான் நமக்கு வியப்பூட்டுகிறது.
முழு அடைப்புக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தபோதே ஒட்டுமொத்த கோவை
மாநகரத்தையும் கண்காணித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால்
பொதுச்சொத்துக்களுக்கு பங்கம் விளைந்திருக்காது; இதுபோன்ற வன்முறைகள்
நடைபெற்றிருக்காது.
உடனே கைது செய்ய வேண்டும்
ஏனோ, அதனைக் காவல்துறையினர் செய்யாது விட்டுவிட்டார்கள். எனவே,
காவல்துறையினர் இனியாவது அலட்சியப்போக்கைக் கைவிட்டு, விழிப்போடு
செயல்பட்டு சசிகுமாரின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய
வேண்டும்; மேலும், வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டு பேருந்துகள் மீதும்,
கடைகள், வணிக வளாகங்கள் மீதும் தாக்குதல் தொடுத்த வன்முறையாளர்கள் மீதும்
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்க
கோவையில் வாழும் இசுலாமிய உறவுகளுக்கும், அவர்களது உடைமைகளுக்கும் எவ்வித
சேதாரமும் ஏற்படாவண்ணம் அவர்களது பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
அச்சுறுத்தல் உள்ள அரசியல் செயல்பாட்டர்கள் பாதுகாப்பை உறுதிசெய்து, மதக்
கலவரங்களை உருவாக்கும்பொருட்டு இதுபோன்ற கொலைக்குற்றங்களில் ஈடுபட்டு
வருவோரையும், மத உணர்வைத் தூண்டி வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரையும்
கைதுசெய்ய தனிப்படை அமைத்து, உடனடியாக அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment