கோவில்பட்டி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பட்டப்பகலில் 100 பவுன் நகை
திருடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் எட்டுநாயக்கன்பட்டி
கிராமத்தில் புனித மிக்கேல் ஆதி தூதர் ஆலயம் உள்ளது. அங்கு பாதுகாவலராக
பணியாற்றும் அருளானந்தம் என்பவர் மதியம் 1 மணி அளவில் ஆலயத்தின் கதவை
பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.
பின்னர் மாலை 5 மணிக்கு அவர் ஆலயத்திற்கு சென்ற போது கதவு திறந்து
கிடந்ததை பார்த்து அதிர்ந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தில்
மிக்கேல் ஆதி தூதர் சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க
செயின் மற்றும் செபாஸ்தியர், அந்தோணியர் சிலைகளின் தலையில் இருந்த தலா
இரண்டு பவுன் மதிப்பிலான இரண்டு சின்ன கிரீடங்கள், 50 பவுன் எடை கொண்ட 9
செயின், ஈட்டி, கிரீடம், மோதிரம், கைகாப்பு, ஜெபமாலை உள்பட 100 பவுன்
நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி முருகவேல்,
இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா, பவுல்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து
தீவிர விசாரணை நடத்தினர்.
பட்டப்பகலில் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம்
பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கொப்பம்பட்டி
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment