காவிரியில் கூடுதல் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில்,
நாளை அவசர அமைச்சரவையை கூட்டுகிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இந்த
அமைச்சரவை கூட்டத்தில், அதிரடியாக முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக தலைமைச்
செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை
தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதைவிட பெரிய
அடி என்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைத்தாக
வேண்டும் என்ற உத்தரவுதான். எனவே, முதல்வர் சித்தராமையா, கர்நாடக
அமைச்சரவையை நாளை அவசரமாக கூட்டுகிறார். அதில் தமிழகத்திற்கு தண்ணீர்
திறந்துவிடாமல் இருக்க முடிவு செய்துவிட்டு ஆட்சியை கலைத்துவிடும்
முடிவுக்கும் அவர் வரக்கூடும் என கூறப்படுகிறது.
ஏனெனில் மேலாண்மை வாரியம் அமைந்தால், கர்நாடகாவிலுள்ள கே.ஆர்.எஸ்
உட்பட அணைகள் நான்கும் அதன் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இதை கர்நாடக
விவசாயிகள், கன்னட அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பை
அமைதிப்படுத்தாவிட்டால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான
செல்வாக்கு இழப்பு ஏற்படும்.
அதைதவிர்த்து ஆட்சியை கலைத்துவிட்டாலோ, மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில்
அணையை எடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிவரும். இதனால் கர்நாடக
மக்களுக்கு பாஜக மீது கோபம் ஏற்படும். இப்படியாக காய் நகர்த்த சித்தராமையா
திட்டமிட்டுள்ளார். எனவே நாளைய அமைச்சரவையில் எந்த மாதிரி முடிவு
எடுக்கப்படும் என்று கர்நாடக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


No comments:
Post a Comment