ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு 2வது முறையாக தடை விதித்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ராம்குமார் பிரேத
பரிசோதனையை நடத்த கூடாது என்றும் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும்
நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் திடீரென தற்கொலை செய்து
கொண்டார் என்று போலீசார் அறிவித்தனர். இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள்
இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்கள் எதிர்ப்பு
தெரிவித்திருந்தனர். ராம்குமாரின் தந்தையும் தொடக்கம் முதலே ராம்குமாரை
போலீசார் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நேற்று சென்னை வந்த ராம்குமாரின் தந்தை பரமசிவம் மகனின்
பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தங்களது மருத்துவர்
ஒருவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை
விசாரித்த நீதிபதி, பரமசிவத்தின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் 3
மருத்துவர் கொண்ட குழு ஒன்றின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும்
உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த பரமசிவன், தனியார் மருத்துவர் முன்னிலையில் தனது
மகனின் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று இன்று காலை உயர்நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ரமேஷ் தனியார் மருத்துவரை
நியமிக்கலாம் என்றார். ஆனால் இதனை நீதிபதி வைத்தியநாதன் ஏற்றுக்
கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே,
3 வது நீதிபதி ஒருவரையும் இணைத்து இந்த தீர்ப்பில் இறுதி முடிவு
எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அதுவரை
ராம்குமார் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்றும் உடல் பத்திரமாக
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் ராம்குமார் பிரேத பரிசோதனை 2வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எப்போது என்பது நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகே தெரிய வரும்.


No comments:
Post a Comment