காவிரி தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இன்று விவசாயிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்று ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று முதலே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் தமிழக முதல்வரின் உருவபொம்மைகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தீவிரமடையும் போராட்டம் கர்நாடக விவசாயிகள், காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாண்டியாவில் விஸ்வேஷ்வரய்யா சிலை முன்பு கூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். கேஆர்எஸ் அணையின் நுழைவுவாயில் பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், அணையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணையும் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் மறிப்பு மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் கறுப்புப் போர்வை போர்த்திக் கொண்டும், டயர்களைக் கொளுத்தியும் விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர். ஹூப்ளி மாவட்டம் சங்கொளி ராயன்னா பகுதியில் மகதாயி நதிநீர் போராட்ட விவசாயிகள் சங்கத்தினர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை எரித்தும், ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை நடத்தினர்.
மாண்டியாவில் பந்த் மாண்டியாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்குக் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து, இன்று வாகன போக்குவரத்து நிறுத்தம், சினிமா காட்சிகள் ரத்து, கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளான இன்று ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இங்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
பேருந்துகள் நிறுத்தம் இதைத் தொடர்ந்து, கர்நாடகா செல்லும் தமிழகப் பேருந்துகள், தமிழக எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியிலிருந்து மைசூர் மாவட்டம் தொடங்குவதால், அங்கு போராட்டக்காரர்கள் இருக்கக்கூடும் என்பதால், தமிழகப் பேருந்துகள் இயக்கப்படாமல், சத்தியமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
No comments:
Post a Comment