காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து இன்று இரவு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார். காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற இருப்பதாக கூறினார். அக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்தே கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சித்தராமைய்யா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்துக்கட்சித் தலைவர்கள், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கர்நாடக அமைச்சர்கள், காவிரி நதிநீர் படுகை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்கும் என்றும் சித்தராமையா உறுதியளித்தார். விவசாயத்துக்கும், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று இரவு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
No comments:
Post a Comment