ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச அழைப்பு, மாதம் ரூ.49 கட்டணத்தில் புதிய லேண்ட்லைன் வசதி என பல சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய திட்டம் மூலம் மாதம் ஒன்றிற்கு ரூ.49 கட்டணத்தில் நிலவழி டெலிபோன் இணைப்பு கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பிரபலப்படுத்த வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் தொலைபேசி இணைப்பதற்கான கட்டணம் இல்லை. இலவச மாக சிம்கார்டு ஒன்றும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பேசுவதற்கு அழைப்பு ஒன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பி.எஸ்.என்.எல் டெலிபோனில் இருந்து பிற சேவைகளுக்கு தொடர்பு கொள்ள ரூ.1.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலும் எந்த நெட்வொர்க்கிற்கும், இலவசமாக பேசிக்கொள்ள இப்போது சலுகையுள்ளது. ஆகஸ்ட் 15 முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியா முழுவதும் பேசுவது முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. சேவையை பல்வேறு காரணங்களால் துண்டித்து கொண்ட வாடிக்கையாளர்களின் நிலுவை கட்டணத்தை தவணைகளில் பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 ஜி சேவையை பலப்படுத்த கூடுதலாக ஒலிபரப்பு டவர்களை ஏற்படுத்தி வருகிறோம். 4 ஜி சேவையை கொண்டு வருவதற்கு வசதியாக சென்னை நகரமெங்கும் புதியதாக 300 டவர்களை நிறுவ டெண்டர் விடப்படும். இதன் மூலம் 4 ஜி சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் பி.எஸ்.என்.எல். சேவையில் உள்ள குறைபாடுகளை துரிதமாக சரிசெய்வதில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment