Latest News

தாய்நாட்டில் பிழைக்க வழியில்லாமல் வெளியே செல்லும் தமிழர்களை இப்படியா வேட்டையாடுவது?.. கருணாநிதி


தாயநாட்டில் பிழைக்க வழியில்லாமல் வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும் அங்கேயும் அடித்து நசக்கப்படுகிறார்கள் தமிழர்கள். ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் எனது நண்பர் சந்திரபாபு நாயுடு விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் தனது அறிக்கையில் தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதில் நாட்டம் உடையவர் சந்திரபாபு நாயுடு என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:
கண்டவனுக்கும் இளக்காரம் "கொண்டவன் கோபியானால், கண்டவனுக்கும் இளக்காரம்" என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அது போலத் தான் தமிழர்களின் நிலை இன்று இருக்கிறது. தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அடித்து நசுக்கப்படுகின்ற கொடுமை தான் நிலவிவருகிறது. உதாரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்ற 32 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன், தமிழகச் சட்டசபையில் கழகத்தின் சார்பில் தம்பி எ.வ. வேலு, கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொடுத்த போதிலும், அதற்கு முதல்வர் தான் பதில் கூற வேண்டுமென்று தெரிவித்து, அது விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. வியாழக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், சனிக்கிழமை சப்தகிரி ரயிலில் இவர்களைக் கைது செய்ததாக ரேணிகுண்டா காவல் துறையினர் தவறானத் தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.

முதல் முறையல்ல ஆந்திரப் போலீசார் இவ்வாறு தமிழர்களைக் கைது செய்வது என்பது முதல் முறையல்ல. பொதுவாக தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள சித்தூர், புத்தூர், நகரி, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளிலே, பேருந்துகளிலும், புகை வண்டிகளிலும் பயணம் செய்யும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரால் அழைத்துச் சென்று உண்மைக்கு மாறான வழக்குகளைத் தொடுத்து, பிரச்சினை வளையத்திற்குள் சிக்க வைத்து, சித்ரவதைக்கு ஆளாக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
சேஷாசலம் வனத்தில் சேஷாசலம் வனப் பகுதியிலே இரண்டு வனத் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பிறகு, இது தொடர்பாக நானூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்து சிறையிலே அடைத்து, அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போதிலும் சுமார் இரண்டாண்டுகள் சிறையிலே வாடினர். இறுதியில் திருப்பதி நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என்று தெரிவித்து விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதிக்குப் பயணம் செய்த 32 தமிழர்களைப் பின் தொடர்ந்து சென்ற ரேணிகுண்டா காவல் துறையினர் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் என்ற இடத்திலே கைது செய்திருக்கிறார்கள்.

உண்மைக்கு மாறாக ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரிகள் இவர்களைச் செய்தியாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்கள் எல்லாம் செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னையிலிருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பயணம் செய்த அவர்களைக் கைது செய்திருப்பதாகவும், அவர்களில் 29 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தையும், 2 பேர் வேலூர் மாவட்டத்தையும், ஒருவர் சென்னையை யும் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்ததோடு, அவர்களிடமிருந்து கோடாரிகள், கத்திகள், கடப்பாரைகள் போன்றஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் உண்மைக்கு மாறாகத் தெரிவித்திருக்கிறார்கள். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களில் 12 பேர் கண்ணமங்கலத்தை அடுத்த மேல்செண்பகத் தோப்பு மற்றும் கீழ் செண்பகத் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

திருப்பதி கோவிலுக்குச் சென்றவர்கள் கைதான ராசேந்திரன் என்பவரின் மனைவி மேனகா செய்தியாளர்களிடம் கூறும்போது, "எனது கணவர் ராசேந்திரன் மற்றும் உறவினர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் செல்வதாகக் கூறி, கடந்த 4ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டனர். மறுநாள் காலை தொலைக் காட்சியில் பார்த்த போது, எனது கணவரையும், உறவினர்களையும் ஆந்திரப் போலீசார் வேண்டுமென்றே செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி கைது செய்திருப்பது தெரிந்தது. ஆந்திரப் போலீசார் பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவர்கள் செம்மரம் வெட்டச் செல்லவில்லை. ஆந்திரப் போலீசார் வேண்டு மென்றே பொய் வழக்குப் போடுகிறார்கள். கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

பிழைக்கச் சென்றவர்கள் இவரைப் போலவே, சங்கர் என்பவரின் மனைவி அமுதா, கார்த்திகேயன் என்பவரின் மனைவி பட்டம்மாள் ஆகியோரும் பிழைக்கச் சென்ற தங்கள் கணவர்கள் கைது செய்யப்பட்ட நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மூன்று குழந்தைகளுக்குத் தாயான சுந்தரி என்பவர் தன்னுடைய தந்தை அப்பாசாமியும், கணவர் அன்பழகனும் கைது செய்யப்பட்டது பற்றியும், அவருடைய கணவர் கடந்த ஆண்டு உடல் நலம் இல்லாமல் இருந்த போது நேர்ந்து கொண்ட பிரார்த்தனையைச் செலுத்துவதற்காகக் கோவிலுக்குச் சென்றவர்களை இவ்வாறு மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறி கைது செய்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த எம். சுப்பாராவ் அவர்களும் ஆந்திர மாநிலக் காவல் துறையினரின் மனிதாபிமானமில்லாத செயலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எனது நண்பர் சந்திரபாபு நாயுடு இந்தச் சம்பவம் குறித்து, ஆந்திர மாநில முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகவும் இன்று செய்தியில் வெளிவந்த போதிலும், கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆந்திர மாநில முதல்வர், நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்கள், ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே நல்லுறவு நின்று நிலைத்திட வேண்டும் என்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்ற முறையில் உடனடியாக இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆவன செய்ய வேண்டுமென்றும்; ஆந்திர மாநிலக் காவல் துறையினரும் எதிர்காலத்தில் இவ்வாறு தமிழர்களைக் குறி வைத்துத் கைது செய்யும் போக்கினைக் கை விட வேண்டுமென்றும்; மிகுந்த நட்புணர்வோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அப்பாவித் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவிட முன்வருவார் என்று பெரிதும் நம்புகின்றேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.