ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மகளிர் மாரத்தான் போட்டியில் பங்கெடுத்த ஜெய்ஷாவுக்கு குடிக்க தண்ணீர் கூட தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயக்கமடைந்த அவர் சிகிச்சைக்கு பிறகு அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில், குற்றச்சாட்டை இந்திய தடகள சம்மேளனம் (ஏஎப்ஐ) மறுத்துள்ளது. ஜெய்ஷாவும், அவரது பயிற்சியாளரும்தான், குடி தண்ணீர் மற்றும் புத்துணர்வு பானங்களை மறுத்ததாக அது கூறியுள்ளது. மகளிர் மாரத்தானுக்கு முந்தைய நாள் இரவு, அணி மேலாளர் ஜெய்ஷா மற்றும் கவிதா ரவுட் ஆகிய இருவருக்கும் என்று தலா 8 பாட்டில்களில் புத்துணர்வு பானங்களை எடுத்து சென்று காண்பித்து, இதில் எந்த பிராண்டை நீங்கள் குடிக்க விரும்புவீர்கள் என கேட்டுள்ளார். ஆனால் ஜெய்ஷாவின் பயிற்சியாளரோ, அவருக்கு அந்த பழக்கம் இல்லை என கூறி மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஜெய்ஷா இதுபோல பானத்தை தவிர்த்த உதாரணம் உண்டு என்பதால், அதுதான் அவரது வழக்கம் என அணி மேலாளர் நினைத்திருந்தார். ஆனால், இப்போது திடீரென, இந்திய நிர்வாகத்தின் மீது ஜெய்ஷா குற்றம் சுமத்துவது ஏன் என்றுதான் புரியவில்லை. ஜெய்ஷா மயக்கமடைந்த இரண்டே நிமிடங்களில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இது துரிதமாக நடைபெற்றது என்பதால்தான், இந்திய நிர்வாகிகளால் ஆம்புலன்சில் அவருடன் செல்ல முடியவில்லை. மாரத்தான் ஓட கட்டாயப்படுத்தப்பட்டதாக ஜெய்ஷா கூறியுள்ளது ஏன் என புரியவில்லை. அவர் ஒலிம்பிக்கில் ஆட தகுதி பெற்றது மாரத்தான் போட்டிக்காக மட்டுமே. 1500 மீட்டர் ஓட்டதிற்காக கிடையாது எனும்போது கட்டாயம் எப்படி வரும். இவ்வாறு இந்திய தடகள அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.


No comments:
Post a Comment