Latest News

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு- சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்


டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் ஆர்.விஷ்ணுபிரியா (27). திருமணமாகாதவர். இவரது தந்தை ரவி. கடலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா பி.எஸ்சி. கணிதத்தில் பட்டம் பெற்றவர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்துவந்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா இறந்து கிடந்தார். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்கறிஞர் மாளவியா ஆகியோர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துவர் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதலில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பிறகு, ரவி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தற்போது தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் சிபிசிஐடி விசாரணை நிறைவடையும் நிலையில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தெளிவான காரணங்கள் இல்லை. ஆகையால் மேல்முறையீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.