செம்மரம் வெட்ட வந்ததாக, ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 32 தமிழர்களின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரம் வெட்டுவதற்கு தமிழர்கள் வருவதாக அம்மாநில செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திரப் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த தமிழர்கள் 32 பேரை, ஆந்திர மாநில போலீசார், செம்மரம் வெட்ட வந்துள்ளதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழர்கள் 32 பேர் மீதும் 6 பிரிவுகளில் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஜாமீன் கேட்டு திருப்பதி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை முடிவடையாத நிலையில், அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். திருப்பதி சேஷாசல வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, கடந்த ஆண்டு தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மீண்டும் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


No comments:
Post a Comment