Latest News

  

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பேச்சை நீக்கக்கோரி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு


சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யாததை கண்டித்து தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திருத்திய நிதி அறிக்கை மீதான பதிலுரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கும் நிலையில், அதனை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நேற்றைய தினம் பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஓ.எஸ். மணியன் தெரிவித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனை ஏற்ற சபாநாயகர் தனபால், அமைச்சர் தெரிவித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்குவது தொடர்பாக நாளை 29ம் தேதி தெரிவிப்பதாக கூறினார். அதன்படி, ஓ.எஸ்.மணியன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என இன்றைய சட்டசபைக் கூட்டம் கூடியதும் திமுகவினர் கூறினர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து, திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

துரைமுருகன் பேச்சு சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார். களவும், காவலும் இல்லை என்பது போல அமைச்சர்கள் பேசிவருகின்ற னர். அப்படி சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது என்றார்.
குற்றங்களே இல்லை தமிழகத்தில் குற்றங்களே நடக்கவில்லை என்று நான் கூறவில் லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களே நடக்காமல் தடுப்பது முடியாத செயல். அதே நேரம், அதிமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறுக்கிட்டு, திமுக ஆட்சியில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அவைக்குறிப்பில் இருந்து நீக்குக நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து பேரவையில் பேசக்கூடாது என பேரவைத் தலைவர் கூறுகிறார். ஆனால், அமைச்சரே அதுபற்றி பேசியுள்ளார். அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் மறுக்கவே, துரைமுருகனும் அதிமுக பற்றி சில கருத்துகளை தெரிவித்தார்.

திமுகவினர் முழக்கம் அதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டதால், துரைமுருகன் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பேரவைத் தலைவர் இருக்கை அருகே வந்து கோஷமிட்டனர்.

அவையை புறக்கணிப்போம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதில் நீதிமன்றத்துக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகள் இருந்தால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறினார். துரைமுருகன் பேச்சை நீக்கியதுபோல, அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதையும் நீக்க வேண்டும். அதுதான் நியாயம். இல்லாவிட்டால், நாளை நிதியமைச்சரின் பதிலுரையை நாங்கள் புறக்கணிக்க வேண்டிவரும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

அமளி துமளி அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என பேரவைத் தலைவர் இருக்கை அருகே நின்றுகொண்டு திமுகவினர் கோஷமிட்டனர். இதனால் பேரவை அலுவல்கள் சுமார் அரை மணிநேரம் பாதிக்கப்பட்டன.

நிர்பந்திக்க முடியாது அமைச்சரின் பேச்சை ஆராய்ந்து அவற் றில் நீதிமன்றத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏதாவது இருந்தால் நீக்கப்படும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இப்படித்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என திமுகவினர் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. துரைமுருகன் தன் பேச்சை தொடரலாம்.

துரைமுருகன்: நான் பேசியதை நீக்கியதுபோல அமைச்சர் பேசியதையும் நீக்கவேண்டும். அதுவரை பேசமாட்டேன். அமைச்சர் பேசியதை இன்றே நீக்காவிட்டால் நாளை ஊடகங்களில் வெளிவந்துவிடும் என்றார். இப்பிரச் சினையில் நான் முடிவு அறிவிக்கும் வரை அமைச்சர் பேசியதை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றார்.

குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் இன்று காலையில் அவை கூடியதும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசினார். நேற்று இந்த அவையில் சில பிரச்சினைகள் நடந்தது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய பேச்சு இன்று ஒரு நல்ல தீர்ப்பு தருவதாக கூறி இருந்தீர்கள். அந்த வகையில் அமைச்சர் பேசிய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கூடிய பணியை நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

பொறுமை அவசியம் இதற்கு சபாநாயகர் தனபால் பதில் அளிக்கையில் பொறுமையாக இருங்கள். இன்று தீர்ப்பு சொல்வேன். என்னை நீங்கள் வற்புறுத்த வேண்டாம் என்றார். உடனே மு.க.ஸ்டாலின், கடந்த 25ம்தேதி ராஜன் செல்லப்பா பேசிய ஆட்சேபனைக்குரிய பேச்சை நீக்கும்படி கூறி இருந்தோம். அப்போதும் இதே பதிலை தான் சொன்னீர்கள்.

வழக்கமான பதில் 27ம்தேதி ஈரோடு தென்னரசு பேசிய ஆட்சேபனைக்குரிய கருத்தையும் அவைக்குறிப் பில் இருந்து நீக்க வலியுறுத்தியதற்கும் அவர் பேசியதை படித்து பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்வதாக கூறினீர்கள்.ஆனால் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை. நேற்று நடந்த பிரச்சினையிலும் 

ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கேட்டோம். அப்போதும் வழக்கம் போலவே பதில் சொன்னீர்கள். இப்போது அந்த தீர்ப்பை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் ஸ்டாலின்.

வற்புறுத்தக் கூடாது இதற்கு சபாநாயகர் கூறும்போது, இந்த கால கட்டத்தில்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று என்னை வற்புறுத்தக்கூடாது. ஆனால் நான் கண்டிப்பாக தீர்ப்பு சொல்வேன். சபையை நடத்த ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். ஆனால் சபாநாயகரின் பதில் திருப்தி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது கருத்தை வலியுறுத்தி பேசினார்.

ஊடகங்களில் வெளிவரவில்லை அப்போது, தீர்ப்பு கிடைக்காவிட்டால் நிதி அமைச்சரின் பதில் உரையை புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தோம். அதனால்தான் இன்று உங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம் என்றார் ஸ்டாலின். அதற்கு சபாநாயகர், நான் தீர்ப்பு சொல்லும் வரை அமைச்சரின் பேச்சு பத்திரிகைகளில் வராது என்றுதான் கூறி இருந்தேன். அதை பத்திரிகைகளும் கடைப்பிடித்துள்ளன என்றார் சபாநாயகர்.

ஒத்துழைப்பு கொடுங்கள் எனவே என்னை வற்புறுத்தக்கூடாது. எனது பரிசீலனையில் உள்ளதால் நான் நிச்சயம் தீர்ப்பு வழங்குவேன். அதுவரை பொறுமையாக இருந்து அவை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன். இன்றைக்கு உறுதியாக அத்தனை தீர்ப்புகளையும் வழங்குவேன் என்றார் சபாநாயகர்.

எதிர்கட்சிகள் வெளிநடப்பு இந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் நாங்கள் சபையை புறக்கணிக்கிறோம் என்று கூறிவிட்டு வெளி நடப்பு செய்தார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளி நடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.