பிலடெல்ஃபியா(யு.எஸ்): கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க ஏற்பாடு செய்யப் போவதாக அதிபர் வேட்பாளர் ஹிலரி க்ளிண்டன் அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி மாநாட்டின் கடைசி நாள், அதிபர் வேட்பாளராக ஏற்புரை ஆற்றிய ஹிலரி க்ளிண்டன், எதிரணியின் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமரிசித்தார்.
கொடுப்பதற்கு மனம் இல்லாத ட்ரம்ப்.. "தன்னுடைய நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் சிறு நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் அந்த நிறுவனங்களின் சரிவுக்கு காரணமாக இருக்கிறார். பணம் இல்லாமல் இல்லை ஆனால் கொடுப்பதற்கு அவருக்கு மனம் இல்லை. சீனா, மெக்சிகோ, துருக்கி, இந்தியா என அனைத்து நாடுகளிலிருந்தும் அவருடைய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இவர் எப்படி அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவார். நம் ராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லும் இவர் எப்படி நாட்டின் அதிபராக ஆக முடியும். துப்பாக்கி அசோசியேஷனுடன் கைக் கோர்த்துக் கொண்டிருக்கும் இவரால், தீவிரவாதிகள் குற்றவாளிகள் கைகளில் துப்பாக்கி கிடைக்காமல் இருக்கச் செய்ய முடியும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செக்.. வால் ஸ்ட்ரீட் மெயின் ஸ்ட்ரீட் பக்கமாக இருக்கவேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்கள் நலனுக்காக நிதியை திருப்ப வேண்டும். ஒர் சதவீதத்தினர் 90 சதவீத பொருளாதர வளத்தை வைத்துள்ளனர். அது மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உதவி செய்யவேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவேன். எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்கச் செய்வோம். சோஷியல் செக்யூரிட்டி திட்டத்தை விரிவாக்குவோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம்..." என பல சமூக நலத்திட்டங்களை அறிவித்தார் ஹிலரி.
கல்லூரியில் இலவசக்கல்வி அவரது முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, கல்லூரியில் இலவசக் கல்வி என்பதாகும். பெர்னி சான்டர்ஸுடன் இணைந்து கல்லூரியில் இலவசமாக படிக்க வகை செய்யப்படும் என்று அறிவித்தார். கூடவே தற்போது கடன் வாங்கி படித்து நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.
சான்டர்ஸுடன் இணைந்து... இவை, இளைஞர்களின் ஆதரவை பெருமளவில் பெற்ற பெர்னி சான் டர்ஸின் முக்கிய கொள்கைகளாகும். இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காக, பெர்னியின் கொள்கைகளை ஹிலரி ஏற்றுக் கொள்வார் என்று நாமும் முன்பே கூறி இருந்தோம். பெர்னியை முக்கிய அமைச்சராக்கி இந்தத் திட்டங்களை செயல்படுத்தப் போகிறார் என்பதைத்தான் பெர்னியுடன் இணைந்து என்று கோடிட்டு காட்டியுள்ளார். கல்லூரியில் இலவசக் கல்வி என்பது வருங்காலத்தில் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தைத் தரக் கூடிய திட்டமாகும். கல்லூரிக் கட்டணம் அதிகம் என்பதாலே பெருமளவு அமெரிக்கர்கள் பள்ளியுடன் நிறுத்திவிட்டு, சாதாரண வேலைகளுக்குச் செல்கிறார்கள்.
கட்டமைப்புக்கு சிறப்பு முன்னுரிமை ஆட்சியைப் பிடித்த முதல் 100 நாட்களுக்குள் உள் நாட்டு கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக செயல்படுத்தப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகுவதுடன், எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கும் என்றார். மாசற்ற எரிபொருள் என்ற கொள்கையுடன் செயல்படுவோம். க்ரீன் எனர்ஜி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும் ,சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்துவோம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் கூறினார்.
வெளிப்படையான பேச்சு சுமார் 56 நிமிடம் நீடித்த அவருடைய பேச்சு, பில் க்ளிண்டன், ஒபாமா, மிஷல் ஒபாமா போல் இல்லாவிட்டாலும், மனதிலிருந்து நேரடியாக வந்தது, மக்களுடன் நேரடியாக தொடர்பாகி விட்டார். மக்களுடன் மக்கள் கருத்தாக அவருடைய பேச்சு இருந்தது. அதே சமயத்தில் டொனலட் ட்ரம்ப்-ஐ புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தி விட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துணை அதிபர் வேட்பாளர்களும் அறிவித்தாகி விட்டது. இரண்டு கட்சிகளின் தேசிய மாநாடும் முடிந்து விட்டது. அதிகாரப்பூர்வமாக அதிபர் வேட்பாளர்கள் களம் இறங்கி விட்டார்கள்.. இனி அமெரிக்க அரசியல் சரவெடிதான்! -இர தினகர்
No comments:
Post a Comment