பாலாற்றில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்ததை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் குடும்பத்துக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: 29-7-2016 அன்று மாலை 6 மணியளவில் வேலூர் மாவட்டம் புல்லூரை அடுத்த சின்ன பள்ளத்தூரைச் சேர்ந்த 45 வயது சீனிவாசன் என்ற விவசாயி, "மழை பெய்தாலும் இனி பாலாற்றில் ஒரு சொட்டு தண்ணீரும் வராத நிலையில் இனி என்ன செய்வது? வாங்கிய விவசாயக் கடனைத் தீர்க்கவும் இனி வழி இல்லை.நமது நம்பிக்கையே போய்விட்டது" என்று புலம்பியபடியே புல்லூரில் உள்ள பாலாற்றின் தடுப்பணையில் திடீரெனக் குதித்து, தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கிறார்.
ஆழ்ந்த இரங்கல் இந்தத் துயரச் சம்பவம் வேலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது. விவசாயி சீனிவாசன் தற்கொலை மரணத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
22 தடுப்பணைகள் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரில் ஆந்திர அரசு ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே கட்டிய தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து, மழை நீர் முழுவதையும் தேக்கி வைத்துள்ளது. அது மட்டும் அல்லாமல் ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஓடும் பாலாற்றின் குறுக்கே, ஏற்கனவே 22 தடுப்பணைகளை 5 அடி உயரத்தில் ஆந்திர அரசு கட்டிவைத்திருக்கிறது.
தடுப்பணைகள் உயரம் அதிகரிப்பு அவை அனைத்தையும், புல்லூர் தடுப்பணையில் செய்ததைப் போல, 20 அடி வரைஆந்திர அரசு உயர்த்திக் கட்டிவருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள மலைகளில் இருந்து வழிந்தோடி வரும் காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திப் பயன்படுத்தும் நோக்கில் மணல் தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டுகிறது. அது மட்டுமல்லாமல் புல்லூர் தடுப்பணையில் படகுக் குழாம், கனகநாச்சியம்மன் கோயில் அருகே சமுதாயக் கூடம், மற்றும் தங்கும் விடுதிகள் என 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாட்டுப் பணிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது.
வழக்கு நிலுவையில் இருந்தபோதும்... தமிழகத்திலே உள்ள அரசியல்கட்சிகளின் தலைவர்கள், பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிராகக் குரல் கொடுத்தற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பாலாற்றினால் பயன்பெறும் நான்கு மாவட்டங்கள் இணைந்து,ஆந்திர அரசின் அத்துமீறலைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூரில் 19-7-2016 அன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவித்ததற்குப் பிறகு, ஜெயலலிதா அரசு தூக்கத்திலிருந்து விழித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது; வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதிலும் அவற்றின் உயரத்தை அதிகரிப்பதிலும் வேகம் காட்டி வருகிறது.
தடையாணை தேவை எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை அவசர அவசியம் கருதி, நினைவு படுத்தி (Mention) உடனடியாக தடையாணை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
சீனு குடும்பத்துக்கு நிவாரண நிதி தடுப்பணைப் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனிவாசன் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கிப் பாதுகாக்க முன் வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment