பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குதித்து பள்ளத்தூர் விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்யவில்லை என்றும் நடத்தப்பட்ட விசாரணைய்யில் அவர் தவறி விழுந்து இறந்தார் என தெரியவந்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மேலும் விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ3 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகாவும்
ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை :
பாலாறு, கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 222 கி.மீ பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
1892ஆம் ஆண்டைய மதராஸ்மைசூர் ஒப்பந்தப்படி, பாலாறு ஒரு பன்மாநில நதி என்பதால், தமிழ்நாட்டின் முன் அனுமதி இல்லாமல் எந்த அணைக் கட்டுமானத்தையோ, அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் ஆந்திர அரசு மேற்கொள்ள முடியாது. 2006ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தாலுக்காவில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரப் பிரதேச அரசு கட்ட எத்தனித்த போது, அதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு ஒரு வழக்கினை தாக்கல் செய்து, அது இன்னமும் நிலுவையில் உள்ளது. தற்போது பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் என்னும் இடத்தில், ஆந்திராதமிழ்நாடு எல்லைக்கருகே அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை 9 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது. இது பற்றி தெரிய வந்தவுடன், 1.7.2016 அன்று ஆந்திர மாநில முதல்வருக்கு இது குறித்து கடிதம் ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கடிதத்தில் உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் என்றும், இயற்கையாக தமிழ்நாட்டிற்கு வந்தடைய வேண்டிய பாலாறு நீரை எவ்வகையிலும் தடுத்திடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன்.
இதே போன்று, கடந்த இரண்டு மாதங்களில், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திரப் பிரதேச அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, உரிய அறிவுரைகளை ஆந்திர அரசுக்கு வழங்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு இது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், எனது உத்தரவின் பேரில், 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் இசைவுப் பெறாமல் ஆந்திரப் பிரதேச அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரத்தினை உயர்த்தியது தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்க வேண்டும்; பெரும்பள்ளம், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளை முன் பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உறுத்துக் கட்டளை பிறப்பிக்க வேண்டும்; ஆந்திரப் பிரதேச அரசு இவ்வாறு செய்வதற்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்; பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் இயற்கையாக ஒடுகின்ற நீரை தமிழ் நாட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசுக்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், வாணியம்பாடி வட்டம், புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மகன் சீனிவாசன் 29.7.2016 அன்று மாலை பெரும்பள்ளம் தடுப்பணையின் மீது நின்று கொண்டு தடுப்பணையில் நிரம்பி இருந்த தண்ணீரைப் பார்த்து வேதனைப்பட்டு ஆந்திரப் பிரதேச அரசு தடுப்பணையைக் கட்டியதால், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு விட்டதே என்ற விரக்தியில், உணர்ச்சி வயப்பட்டு, தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் சீனிவாசன் பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது நின்று வேடிக்கைப் பார்க்கும் போது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment