சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதியை கொலை செய்த கொலையாளியை 8 நாளில் கண்டுபிடித்த போலீசால் மாயமான வேந்தர் மூவிஸ் மதனை 2 மாதமாகியும் கைது செய்ய முடியாதது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து வேந்தர் மூவிஸ் மதன் பணம் வசூலித்ததாக வெளியான புகாரை சுட்டிக்காட்டியுள்ளார். மே மாத இறுதியில் மதன் தலைமறைவாவதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில், அந்தப் பணத்தை எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்ததையும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ள புகாரில், எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பச்சமுத்து கூறிய ஒரே காரணத்திற்காகவே, வேந்தர் மூவிஸ் மதனிடம் பணம் கொடுத்ததாக புகார் அளித்துள்ளதாகவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்தப் புகார் தொடர்பாக பச்சமுத்துவிடம் விசாரணை நடத்த தமிழக அரசும், காவல்துறையும் தயங்குவது ஏன்? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அனைத்துப் பிரச்னைகளிலும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்கும் திமுகவும், அதிமுகவும், எஸ்.ஆர்.எம். மோசடியில் வாய் மூடி மவுனியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இப்பிரச்னையில், தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்கினால், உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment