Latest News

ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?... ஜவாஹிருல்லா கேள்வி


மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மனிதநேயம் உள்ள மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்த இளம் பெண் சுவாதி கொலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ராம்குமார், செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும்போது தற்கொலைக்கும் முயன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு பொது இடத்தில் வைத்து, காலைப் பொழுதில் வேலைக்குப் புறப்பட்ட இளம் பெண்ணை மிகக் கொடூரமாக ஒரு மனித மிருகம் கொன்றுள்ளதை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது. இந்தக் கொடூரப் படுகொலையை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் கண்டித்துள்ளன. கொலையாளியைப் பற்றிய துப்பு கிடைக்காமல், ஒரு வார காலமாக காவல்துறை மிகத் தீவிரமான முறையில் மிகச் சிக்கலான புலனாய்வு முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, சுவாதி என்ற 'உயர் சாதிப்' பெண்ணை பிலால் மாலிக் என்ற மிருகம் கொன்றுள்ளதாகவும், கொலையுண்டவர் பிராமணப் பெண் என்பதால் தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதாகவும், யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ், திராவிட இயக்கம், பொது உடமை இயக்கம், தலித் இயக்கம் என அனைத்துத் தரப்பையும் கொச்சைப்படுத்தியும் பதிவிட்டுள்ளார். சுவாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடிவந்திருப்பார், ஊடகங்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்து இருக்கும், தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள். திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள் என்று மிகவும் அருவறுக்கத்தக்க நடையில், ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

சுவாதியின் கொடூரக் கொலையால் தமிழகத்தில் மிகப்பெரிய கோப அலை உருவாகியுள்ள சூழலில், அதை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் கடைந்தெடுத்த கயமைத்தனத்தை ஒய்.ஜி. மகேந்திரன் செய்துள்ளார். கொலையாளி பிலால் மாலிக்தான் என்று இவர் எப்படிக் கண்டுபிடித்தார். ஏன் சமூக ஊடகங்களில் பரப்பினார்? தமிழகத்தின் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டிவிடும் கருத்தை வெளியிட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒய்.ஜி. மகேந்திரன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எடுக்கப்போகிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். வதந்திகள் மூலம் கலவரம் வளர்த்து, நாட்டின் அமைதியைக் குலைத்து அரசியல் லாபம் அடைவது சங்பரிவாரத்திற்கு கைவந்த கலையாகும். மாட்டுக்கறி வைத்திருந்தார் என அஹ்லாக்கைக் கொன்றது. முஸாஃபர் நகர் முஸ்லிம்களை நிர்மூலமாக்கியது. கைரானாவில் இந்துக்களை முஸ்லிம்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விட்டார்கள் என்று பரப்பியது ஆகியவை இதற்கு உதாரணங்கள். சுவாதி கொலையின் மூலம் எழுந்த பொதுமக்களின் கோபத்தை, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் திருப்பிவிட கயமைத்தனமிக்க முயற்சியில் இறங்கிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நியாயம் கேட்கும் வீரிய போராட்டங்களில் இறங்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.