காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளதால் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பெயரை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்து வந்தார். சட்டசபைத் தேர்தலை அவரது தலைமையில் திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி சந்தித்தது. மிகப் பெரிய அளவில் திமுக, காங்கிரஸுக்கு இடங்களைக் கொடுத்தாலும் கூட வெறும் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஜெயித்தது.
இதனால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. மேலும் இளங்கோவன் மீதும் ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குப் பறந்தன. இந்த நிலையில் தனது தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்து விட்டார். இதனால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு போயிருந்ததால் அடுத்த தலைவர் என்பதில் தாமதம் நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது ராகுல் திரும்பி விட்டார். இதையடுத்து விரைவில் புதிய தலைவருக்கான ஒப்புதலை அவர் தருவார் என்று தெரிகிறது. தற்போதைக்கு அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது. எச். வசந்தகுமாரும் முயற்சிக்கிறார். முன்னாள் தலைவர்களான தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி ஆகியோரும் முயற்சித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment