இன்போசிஸ் ஊழியர், சுவாதி கொலை குற்றவாளியை கைது செய்வதில் ஆதார் அட்டை உதவிகரமாக இருக்கப்போகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகளான சுவாதி (24), செங்கல்பட்டு அருகேயுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பணியிடம் செல்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவர் ரயிலுக்காக காத்திருந்தபோது, வாலிபர் ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.
பெரும் பீதி இந்த கொலை சம்பவம் சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரயில் மூலம் பணிக்கு செல்லும் பெண்களும், அவர்களின் பெற்றோரும் பெரும் பீதியடைந்துள்ளனர். கொலை நடந்து 5 நாட்களும் ஆகும் நிலையிலும், குற்றவாளியை கைது செய்யாமல் இருப்பது அவர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
விசாரணை மாற்றம் கொலையாளியை அடையாளம் காணும்வகையில் 2 சிசிடிவி வீடியோக்கள் கிடைத்தும், கொலையாளியை நெருங்க முடியாத ரயில்வே போலீசாரின் திறமையின்மை காரணமாக, கொலை வழக்கு நேற்று சென்னை சிட்டி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
விஞ்ஞான ரீதியில் விசாரணை சென்னை போலீசார், விசாரணையின் வேகத்தை துரிதப்படுத்தியுள்ளனர். கொலையாளி புகைப்பட ஆதாரம் சரியில்லாத காரணத்தால், விஞ்ஞான ரீதியிலான விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
அரிவாள் பறிமுதல் சுவாதியை கொன்ற, கொலையாளி அரிவாளை, சற்று தொலைவிலுள்ள தண்டவாளத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றான். போலீசார் அதை பறிமுதல் செய்த நிலையில், அதில் பதிவான கைரேகையையும், சுவாதி உடலில், ஆடையில் கொலையாளி கை பட்ட இடங்களில் சேகரிக்கப்பட்ட கை ரேகையையும் கொண்டு தங்களிடமுள்ள கொலையாளி, ரவுடிகளின் கை ரேகையுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வு செய்தனர்.
பிரபல குற்றவாளியில்லை கொலையாளி தான் பயன்படுத்திய அரிவாளில் இருந்த கை ரேகையை லாவகமாக துடைத்துள்ளது அப்போது தெரியவந்தது. இருப்பினும், சில இடங்களில் அவனது கை ரேகை பதிவாகியுள்ளது. இந்த கை ரேகை பழைய குற்றவாளிகளோடு ஒத்துப்போகவில்லை.
ஆதார் உதவி பழைய குற்றவாளிகளின் கை ரேகையோடு கொலையாளியின் கை ரேகை ஒத்துப்போகவில்லை என்பதால், ஆதார் அடையாள அட்டை பிரிவு அதிகாரிகளின் துணையை நாடியுள்ளனர் சென்னை போலீசார்.
கை ரேகை துருப்பு சீட்டு ஆதார் அட்டையில் அனைவரது கை ரேகையும் கட்டாயம் பதிவாகியிருக்கும். கொலையாளியின் கை ரேகையை வைத்து அதற்கு மேட்ச்சான கைரேகையை தேடினால், கொலையாளியின் முழு விவரமும் போலீசாரின் கைக்கு வந்துவிடும். இதை வைத்து போலீசார் அவனை வேட்டையாடிவிடலாம். எனவே இக்கொலை வழக்கில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கை மேலும், சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தலை முடி, சட்டை பட்டன் போன்ற மேலும் சில தடயங்களும் விஞ்ஞான பூர்வ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே குற்றவாளியை விரைவில் கைது செய்துவிடலாம் என காவல்துறை நம்புகிறது.
No comments:
Post a Comment