சேலம் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். வழக்கை மெத்தனமாக கையாண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை அவர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த அண்ணாதுரை, விசைத்தறி தொழிலாளி. இவரது மூத்த மகள் வினுப்பிரியா. ஃபேஸ்புக்கில் மார்பிங் மூலம் ஆபாச புகைப்படம் பதிவேற்றப்பட்டதைப் பார்த்து நேற்று வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள இளம்பெண் வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் உறவினர்களும் 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வினுப்பிரியாவின் தற்கொலைக்கு காவல்துறையினரும் ஒரு காரணம் என்று கூறிய பெற்றோர்கள், குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டதை கைவிடப்போவதில்லை என்று கூறினர். கடந்த 21ம்தேதி, அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ‘வினுப்பிரியா மைதிலி' என்ற பேஸ்புக் ஐடியில் இருந்து நட்பு வட்டத்தில் இணையக் கேட்டு மெசேஜ் வந்துள்ளது. அது வினுப்பிரியாவின் ஐடி என்று நினைத்த உறவினர், அதை ஏற்று, அந்த ஐடியை திறந்து பார்த்துள்ளார். அதில் வினுப்பிரியாவின் ஆபாச படங்கள் இருந்துள்ளது. மேலும், இளம்பிள்ளையை சேர்ந்த பலர், அந்த ஃபேஸ்புக் ஐடியின் நட்பு வட்டத்தில் இருந்துள்ளனர். உடனே அவர் இது குறித்து அண்ணாதுரையிடம் கூறியுள்ளார்.
போலீசில் புகார் இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும், சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமியிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சேலம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தார்.
ஃபேஸ்புக் ஐடி முடக்கம் இந்த படத்தை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பேஸ்புக் ஐடியை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார், ஃபேஸ்புக் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால் உடனடியாக முடக்க முடியாது. குறைந்த பட்சம் 20 நாட்களாவது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஆபாசபடம் இந்நிலையில் ஞாயிறன்று மாலை, அந்த ஐடியில் வினுப்பிரியாவின் படத்தை போட்டு, தொடர்புக்கு என்று அண்ணாதுரையின் செல்போன் நம்பரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அண்ணாதுரை, சங்ககிரி டிஎஸ்பியிடம் புகார் தெரிவிக்க மனைவியுடன் நேற்று காலை 11 மணிக்கு பைக்கில் கிளம்பியுள்ளார்.
வினுப்பிரியா தற்கொலை அப்போது வினுப்பிரியா மற்றும் அவரது பாட்டி கந்தம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். காலை 11.30 மணியளவில் கந்தம்மாள் குளிக்க வந்தபோது, வீட்டின் இருபக்க கதவுகளும் மூடப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, வினுப்பிரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
ஃபேஸ்புக் முடக்கம் ஆபாசமாக படம் வெளியானதால் வினுப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வினுப்பிரியாவின் தற்கொலையை தொடர்ந்து அவரது பெயரில் செயல்பட்ட ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
தற்கொலை கடிதம் தற்கொலை செய்த ஆசிரியை வினுப்பிரியா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில், முதல்ல நீங்க எல்லாரும் என்னை மன்னிருச்சுருங்க. என்னோட லைப் போனதுக்கு அப்பறம் நான் வாழ்ந்து என்ன பண்ண போறன். எனக்கு வாழ பிடிக்கல என்று எழுதியுள்ளார் வினுப்பிரியா.
என்னை நம்புங்க என்னோட அம்மா, அப்பாவே என்னை நம்பாதப்போ, நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம். அவங்களே என்ன பத்தி கேவலமா பேசுறாங்க., சத்தியமா சொல்றேன், நான் என் போட்டோஸ் யாருக்கும் அனுப்பல. நான் எந்த தப்பும் பண்ணல. பிலீவ் மி.. ஒன் செகன்ட் சாரி.. சாரி.. பை என்று அந்த கடிதத்தில் வினுப்பிரியா தெரிவித்திருந்தார்.
வாட்ஸ் அப் புகைப்படம் அண்ணாதுரை தனது ஸ்மாட் போனில் உள்ள வாட்ஸ்அப்பில் மகள் வினுப்பிரியாவின் படத்தை புரொபைல் படமாக வைத்துள்ளார். அந்த படத்தை தான், விஷமிகள் காப்பி செய்து மார்பிங்கில் ஆபாச படமாக சித்தரித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண் கேட்டவரிடம் விசாரணை மேட்டூரைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வினுப்பிரியாவை பெண் கேட்டுள்ளார். அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அண்ணாதுரை, பெண் கொடுக்க மறுத்துள்ளார். அந்த வாலிபர் கடந்த 14ம்தேதியும், அண்ணாதுரையை போனில் தொடர்பு கொண்டு பெண் கேட்டுள்ளார். இதையடுத்து வாட்ஸ்அப்பில் ஆபாச படங்கள் பரவியதால், அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயார் கதறல் எனது மகள் சாவுக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும். அதுவரை சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம். மகள் சாவுக்கு நீதி கிடைக்காவிட்டால் அடுத்து நடப்பது எனது மரணம் தான் என்று கதறி அழுகிறார் வினுப்பிரியாவின் தாயார்.
தந்தை குற்றச்சாட்டு என் மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்த 5 நிமிடத்திலேயே அந்த பேஸ்புக் ஐடி முடக்கப்பட்டுள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள், பணவசதி உள்ளவர்கள் புகார் கொடுத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போலீசார், எங்கள் புகாரின் மீது மெத்தனம் காட்டியுள்ளனர் என்று வினுப்பிரியாவின் தந்தை தெரிவித்தார்.
உடலை வாங்க மறுப்பு எனது மகளுக்கு வந்த இந்தநிலை, இனிமேல் யாருக்கும் வர கூடாது. எனவே இந்தியாவில் பேஸ்புக்கிற்கு தடை விதிக்க வேண்டும். வினுப்பிரியா சாவு குறித்து வழக்குப்பதிவு செய்வதுடன், உண்மையான குற்றவாளியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை எனது மகள் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கலெக்டரிடம் மனு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய வினுப்பிரியாவின் பெற்றோர்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று போராட்டம் நடத்தியதோடு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். அலட்சியம் காட்டிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எஸ்.பி மன்னிப்பு இதனிடையே வினுப்பிரியாவின் பெற்றோரிடம் பேசிய சேலம் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பகிரங்க மன்னிப்பும் கேட்டார். இதனைத் தொடர்ந்து வினுப்பிரியாவின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
போலீஸ் மீது நடவடிக்கை ஆபாச புகைப்படம் குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது மெத்தனமாக விசாரணை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் எஸ்.பி உறுதி அளித்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடத்திய போராட்டத்தை வினுப்பிரியாவின் பெற்றோர் விலக்கிக் கொண்டனர்.
No comments:
Post a Comment