இன்போசிஸ் பெண் ஊழியல் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து ஒரு பொது நல வழக்காக எடுத்துக்கொண்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், மத்திய, மாநில அரசுகளுக்கு 10 கேள்விகளை எழுப்பி, ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
1.ரயில் நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களிலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் பாதுகாப்பு கருதி ஏன் சிசிடிவி கேமரா பொருத்தவில்லை. ஏன் இந்த நவீன தொழில்நுட்பத்தை ரயில்வே போலீசாரும், அரசும் பின்பற்றவில்லை. 2. சிசிடிவி கேமரா பொருத்துவதற்கும், நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், மத்திய, மாநில அரசுகள் ஏன் நிதி ஒதுக்கவில்லை. 3. இதுவரை எத்தனை இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 4. எத்தனை இடங்களில் பொருத்த வேண்டியுள்ளது. 5. முக்கிய இடங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்த எவ்வளவு கால அவகாசம் தேவை. 6. ரயில்வே போலீஸ் மற்றும் போலீஸ் படையில் காலி இடங்களை ஏன் நிரப்பவில்லை. 7. போலீஸ் படை முக்கியத்துவம் பற்றி அரசுக்கு தெரிந்து இருந்தும், நாள் தோறும் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் போலீஸ் படையை ஏன் பலப்படுத்தவில்லை. அரசுக்கு தெரிந்திருந்தும் இதை ஏன் செய்யவில்லை. 8. நவீன மயமான கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் முக்கிய சாலைகள், முக்கிய இடங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களையும் கண்காணிக்கும் வசதி ஏன் ஏற்படுத்தவில்லை. ஒரே அமைப்பின் கீழ் செயல்படக் கூடிய ஒரு பெரிய கட்டுப்பாட்டு அறையை அமைக்காதது ஏன். விபத்துக்களை தடுப்பதற்கு, கொலைகளை கண்டுபிடிப்பதற்கு உயர்தரமான, நவீன மயமான கேமராக்களை தமிழக அரசு ஏன் வாங்கி பொருத்தாமல் இருக்கிறது. இது தொடர்பாக ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா. 9. ஐடி கம்பெனிகள், கார்ப்பரேட் கம்பெனிகளையும் அரசு ஏன் இத்திட்டத்தில் வரவேற்காமல் உள்ளது. அவர்களை அழைத்து ஊழியர்களுடைய பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்தும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளீர்களா. 10. மத்திய அரசும் ஒரு பொதுவான பாதுகாப்பு சட்டத்தை ஏன் இயற்றவில்லை. எல்லா மாநில அரசுக்கும் இது தொடர்பாக எந்த உத்தரவாவது பிறப்பித்துள்ளீர்களா. ஆந்திர மாநிலத்தில் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் போல இந்தியா முழுவதும் ஏன் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு கேள்விகள் எழுப்பியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment