காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் சகோதரர் உள்பட 11,967 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. அனைவரையும் வரவேற்று பேசினார் ஜெயலலிதா. இணைப்பு விழாவில் மருத்துவ படிப்புக்கு நிதி உதவி கோரிய மாணவிக்கு 1லட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். தி.மு.க, காங்கிரஸ், மதிமுக மற்றும் த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும், இன்ன பிற அமைப்புகளிலும் பணியாற்றி வரும் வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை வடக்கு, கோவை வடக்கு, நீலகிரி, நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் சுமார் 11 ஆயிரத்து 967 பேர் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலை அதிமுகவில் இணைந்தனர். சென்னை ராயப்பேட்டையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
பார் கவுன்சில் உறுப்பினர்கள்-2, நகர மன்றத் தலைவர்-1, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்-1, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்-6 பேர், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள்-4 பேர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1, ஊராட்சி மன்றத் தலைவர்கள் 5 பேர் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 320 நிர்வாகிகள் என, 1,500 மகளிர் உள்ளிட்ட 11,967 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போரூர் எம்.எல்.ஏ. சி.ஏழுமலை ஏற்பாட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் ராஜி, தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், சேத்துப்பட்டு பழனி, பூங்காவனம் லோகநாதன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேத்துப்பட்டு ஒன்றிய குழு 11-வது வார்டு உறுப்பினர் ஏ.அன்புதாஸ், தே.மு.தி.க. 13-வது வார்டு உறுப்பினர் முருகையன் உள்பட 9363 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளரும், சிவகங்கை நகர்மன்ற தலைவர் எம்.அர்ஜுனன் தலைமையில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி 27-வது வார்டு கவுன்சிலர் பரமேசுவரி, ம.தி.மு.க. மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்லச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுகுமாறன் உள்ளிட்ட 1241 பேர்களும், தே.மு.தி.க. முன்னாள் தேர்தல் பிரிவு செயலாளர், மக்கள் தே.மு.தி.க. ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.வீரப்பன், மானாமதுரை ம.தி.மு.க. பெரியசாமிராஜா தேவகோட்டை குமார் உள்பட 1250 பேர் இன்று இணைந்தனர்.
தேமுதிக தொழிற்சங்க செயலாளர் தே.மு.தி.க. முன்னாள் மாநில தொழிற் சங்க செயலாளர் எம்.சவுந்திர பாண்டியன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.மலர்மன்னன், சுரேந்திரன், சுதேஷ்பாபு, தூத்துக்குடி தொழிற்சங்க செயலாளர் பி.வெற்றிவேல், நாமக்கல் விஜய், கோவை செல்லத்துரை, நீலகிரி முஜிபுர் ரகுமான் உள்பட 1000 பேர் சேர்ந்தனர்.
தேமுதிக மாணவரணி தே.மு.தி.க. மாவட்ட மாணவரணி துணை செயலாளர் அடையார் சீனிவாசன், வேளச்சேரி பிரேம்குமார் தலைமையில் ஆர்.ரகுராமன், தி.மு.க. டி.ஏ.ஜார்ஜ் உள்பட 200 பேர் இணைந்தனர்.
தமாகா உறுப்பினர்கள் த.மா.கா. வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் நடிகர் சி.ராஜ்குமார், துணைத் தலைவர் வக்கீல் ஜோதி, துறைமுகம் லோகானந்த், மோகன்பாபு, ஜமுனா ராணி, மாநில செயலாளர் மகாத்மா சீனிவாசன்.
இனியன் சம்பத் தமிழ் தேசிய கட்சி தலைவர் இனியன்சம்பத் அக்கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். புரசைவாக்கம் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, த.மா.கா. மாநில இணை செயலாளர் ஆரணி கருணாமூர்த்தி உள்பட பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மாணவரின் கல்விக்கு உதவி ஈரோடு மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான சரவணன் 2007ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, சென்னை எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பதற்கான இடம் கிடைத்தும், குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். அவருடைய படிப்பிற்கு ஜெயலலிதா உதவி செய்தார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி குடும்பத்துடன் ஆசி எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து நிதியுதவி வழங்கிய நிலையில், அதிக மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற சரவணன், இந்த ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று சரவணனும், அவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து, நன்றியை தெரிவித்து, ஆசி பெற்றார்.
மாணவிக்கு நிதி உதவி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவி பிரியதர்ஷினி, சென்னை, கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்தும், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும், மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி கோரி ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
ரூ. 1,10,000 காசோலை மாணவி பிரியதர்ஷினி மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் 1,10,000 ரூபாய்க்கான வரைவோலையை வழங்கி, மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்க தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment