எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப்போனதாகத் தான் கூறவில்லை. நான் கூறிய கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய போது, தன்னுடைய ராஜதந்திரத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்று வைகோ கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் மதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜனநாயக முறைப்படியோ கட்சிகளின் கொள்கை அடிப்படையிலோ தேர்தல் நடைபெறவில்லை. அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுமே இதுவரையில் இல்லாத வகையில் மக்களுக்கு பணத்தை கொடுத்தே வாக்குகளை பெற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை. மக்கள் நல கூட்டு இயக்கம் என்பது நான்கு கட்சிகளை கொண்ட நிரந்தர அமைப்பு. மக்கள் நலக்கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அணி. அதில் இணைந்து போட்டியிட்டவர்கள் தற்போது வெளியேறுவது அவர்களது உரிமை.
மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து வருகிற உள்ளாட்சி தேர்தலைச் சந்திப்போம். எனினும், தேமுதிகவுடனும் தமாகாவுடனும் அரசியல் ரீதியாக நல்ல நட்பும் நேசமும் நீடிக்கிறது. திமுகவின் தோல்விக்கு தன்னுடைய ராஜதந்திரம் தான் காரணம் என்று பேசியதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்த கேள்விக்கு, தான் அப்படிக் கூறவில்லை. கருணாநிதி ராஜதந்திர மிக்கவர் என்றும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான முடிவை எடுக்கிறார். அந்த அளவுக்கு என்னிடம் ராஜதந்திரம் இல்லை என கருணாநிதி நினைக்கிறார். ஆனால், ஒரு போதும் எங்கள் கட்சியை அழிக்க விடமாட்டேன் என்றே கூறினேன். ஆனால், நான் கூறிய பலவற்றை மறைத்துவிட்டு சிலவற்றை மட்டும் தொகுத்து வெளியிட்டுள்ளனர். அது போல நான் கூறவில்லை. பத்திரிக்கைகளில் செய்திகள் தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.
No comments:
Post a Comment