புதுச்சேரியில் 14வது சட்டசபை இன்று கூடியது. சபாநாயகராக முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், துணை சபாநாயகராக சிவக்கொழுந்தும் தேர்வு செய்யப்பட்டனர். இன்று இவர்கள் தங்களது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளை என். ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து சபாநாயகர் பதவிக்கு போட்டியிட முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், துணை சபாநாயகர் பதவிக்கு தற்காலிக சபாநாயகரான சிவக்கொழுந்துவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் தங்கள் வேட்புமனுக்களை சட்டசபை செயலாளர் மோகன்தாசிடம் தாக்கல் செய்தனர். அவர்களது வேட்புமனுக்களை அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து வழிமொழிந்து இருந்தனர். வேட்புமனு தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
சபாநாயகர் பதவிக்கு வைத்திலிங்கத்தை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு சிவக்கொழுந்துவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது. இன்று காலையில் புதுச்சேரி சட்டசபை கூடிய உடன் சபாநாயகராக முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், துணை சபாநாயகராக சிவக்கொழுந்தும் தேர்வு செய்யப்பட்டனர். இன்று இவர்கள் தங்களது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து முதல்வர் நாராயணசாமியும், உறுப்பினர்களும் சபாநாயகரை வாழ்த்தி பேசினர். சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட வைத்திலிங்கத்தை இருக்கையில் முதல்வர் நாராயணசாமி அமர வைத்தார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்றைய சட்டசபை நடவடிக்கையை புறக்கணித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட போதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தனியாக தற்காலிக சபாநாயகர் அறையில் பொறுப்பேற்றனர். அதேபோல இன்றைய சபாநாயகர் தேர்வின் போதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு நாராயணசாமியை முதல்வராக தேர்வு செய்தது. முதல்வர் பதவிக்காக போராடிய புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்துக்கு இறுதியில் அமைச்சர் பதவியும், மற்றொரு போட்டியாளர் வைத்திலிங்கத்துக்கு சபாநாயகர் பதவியும் வழங்கி பிரச்னைக்கு காங்கிரஸ் தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Post Comm
No comments:
Post a Comment