Latest News

கச்சத்தீவு விவகாரத்தில் என்னை வசைபாடுவதை ஜெ., நிறுத்த வேண்டும்- கருணாநிதி



கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க தாம் எப்போதும் ஒப்புக் கொண்டதில்லை என்று கருணாநிதி விளக்கமளித்துள்ளார். சட்டசபையில் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் க.பொன்முடி திங்கள்கிழமை பேசினார். அப்போது அவர், 1991ம் ஆண்டில் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்டே தீருவேன் எனப் பேசியதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்க திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்று கூறினார். 1974, 1976-ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு இதற்கான ஒப்பந்தங்களைச் செய்தபோது, அதைத் தடுப்பதற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி என்ன செய்தார். ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா ஒன்றுமேயில்லையே. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுகவும், அன்றைய முதல்வர் கருணாநிதியுமே காரணம் என்று கூறிய ஜெயலலிதா. எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி விளக்கம் ஜெயலிதாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், கச்சத்தீவை கொடுத்தது இருநாட்டுக்கு இடையிலான நல்லுறவு வேண்டும் என்பதற்கே என கூறியவர் ஜெயலலிதா என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை மறைப்பதா கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். தாம் கூறிய கருத்தையெல்லாம் மறந்து மற்றும் மறைத்துவிட்டு சட்டமன்றத்தில் இவ்விவகாரத்தை ஜெயலலிதா பேசுவதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் தீர்மானம் 1974-ம் ஆண்டிலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தர கூடாது என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரத்துடன் விளக்கம் 1974ஆம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் "கச்சத் தீவு" பற்றி நான் முன் மொழிந்த தீர்மானம் இதோ என்று ஆதரத்துடன் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, தி.மு.க. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வில்லை என்று கூறியுள்ளார். 

சட்டசபையில் தீர்மானம் "கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக தி.மு.க. அரசின் சார்பாக வலியுறுத்தப் பட்டிருக்கிறது அப்போது பேசியதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடம் எந்த பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்சினையில், "கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை" என்றும், "கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்" என்றும்; "கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்" என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இனியும் கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா என்மீது வசைபுராணம் பாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.