முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் திரும்பியதும் அப்படியே பல்டி அடித்து விட்டார். அணை குறித்து மக்கள் மனதில் இன்னும் அச்சம் உள்ளது. மேலும் அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரள முதல்வராகப் பதவியேற்றதும் முதல் முறையாக டெல்லி வந்தார் பினராயி விஜயன். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பினராயி விஜயன் பதிலளிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புதான் முக்கியமானது. அதுதான் இந்தப் பிரச்சினை உருவாகவும் காரணம். அதன் அடிப்படையில்தான் இது அணுகப்பட்டது. இதுதொடர்பாக நிபுணர் கமிட்டியும் அமைக்கப்பட்டது. அது அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் அணை பாதுகாப்பாக, பலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதை நாம் புறக்கணிக்க முடியாது. அதை சந்தேகப்படவும் முடியாது, அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. அணை பலமாக உள்ளது, அணையின் பலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றார் அவர். புதிய அணை கட்ட வேண்டும் என்று கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டதே என்ற கேள்விக்கு, அதற்கான அவசியம் இப்போது இல்லை. அதுதான் நிபுணர் குழு தெளிவாக கூறி விட்டதே, அணை பலமாக உள்ளதென்று. நிபுணர் குழு அறிக்கைக்கு முன்புதான் புதிய அணை தொடர்பான நிலைப்பாட்டை சட்டசபையில் எடுத்தோம். ஆனால் நிபுணர் குழு அறிக்கைக்குப் பின்னர் அந்தத் தீர்மானம் பொருத்தமற்றதாகியுள்ளது. பிரச்சினைகளை உருவாக்குவது மிக மிக எளிது. ஆனால் தீர்வு காண்பதுதான் கடினம். நான் தீர்வுகளை மட்டுமே விரும்புபவன். தமிழ்நாடு நமது அண்டை மாநிலம். தமிழகத்துடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார் பினராயி விஜயன். இதனால் முல்லைப் பெரியாறு பிரச்சினை பினராயி காலத்தில் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் திரும்பிய பினராயி அப்படியே ஜகா வாங்கி விட்டார். திருவனந்தபுரம் வந்து சேர்ந்த அவரிடம் செய்தியாளர்கள், டெல்லி பேச்சு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு விஜயன், கேரளாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிபுணர் குழு அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ள போதிலும் கூட மக்கள் மனதில் அச்சம் உள்ளது என்றார் விஜயன்.
No comments:
Post a Comment