தனியார் பால் நிறுவனமான திருமலாவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது. இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை தற்போது அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சில தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்ததியது.
இந்நிலையில், தனியார் பால் நிறுவனமான திருமலாவும் தனது பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி உள்ளது. இது நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலை உயராத போது திருமலா நிறுவனம் நாளை திங்கட்கிழமை (மே.30) முதல் தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்துவதாக எங்களது பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வரும் முன்னணி பால் நிறுவனமான ஹட்சன் ஆரோக்கியா நிறுவனம் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல் வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தியது. திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு முன் அறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 கிராம் அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு ரூ.8.57 பைசா வரை மறைமுக விலையேற்றத்தை மக்கள் மீது திணித்தது. அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு ரூ. 2 பால் விற்பனை விலையையும் உயர்த்தியது. மக்கள் விரோத நடவடிக்கையாக பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்தும் திருமலா நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களை பாதிக்கின்ற வகையில் பால் விலை உயர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் உடனடியாக விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment