Latest News

  

பாடத்திட்டத்தை உடனே மாற்றியாக வேண்டும்!


உடல்நலம் காக்கும், உயிர்காக்கும் புனிதமான மருத்துவதொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதற்குரிய படிப்புகளை அளிப்பது மருத்துவக்கல்வியாகும். அந்தவகையில் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் இருக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரிகள் தவிர, தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தனியாக இயங்குகின்றன. பல மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை சேர்ப்பதற்காக நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு நடத்துகிறார்கள்.

‘நீட்’ என்று கூறப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மூலமாகவும் அகில இந்திய அளவிலான 15 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 2007–ம் ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு முறை ரத்துசெய்யப்பட்டு, பிளஸ்–2 தேர்வில் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில்தான் இங்குள்ள அரசு 

மருத்துவக்கல்லூரிகளுக்கும், பல் மருத்துவக்கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள ஏழைமாணவர்களும், தமிழ்வழி படிப்பவர்களும் நுழைவுத்தேர்வு எழுதி தேர்வுபெற முடியாது என்பதால் இந்த புதியமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் 412 மருத்துவக்கல்லூரிகளில் ஆண்டுதோறும் 52 ஆயிரத்து 715 மாணவர்கள் மருத்துவப்படிப்புக்காக சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 8 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளும், ஒரு தொழிலாளர் ஈட்டுறுதி கல்லூரியும், 9 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 257 இடங்களில் மாணவர்கள் பிளஸ்–2 மார்க்குகளின் அடிப்படையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதேபோலவே பல் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இப்போது திடீரென்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரப்படுகிறது. அதிலும் அந்தந்த மாநிலங்களிலோ, தனியார் கல்லூரிகள் உள்பட எந்த கல்லூரி என்றாலும் சரி, மருத்துவப்படிப்புக்கும், பல் மருத்துவப்படிப்புக்கும் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது. சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியம் நடத்தும் ‘நீட்’ அதாவது தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மூலமாகத்தான் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று மிகக்கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்த 1–ந் தேதி நீட் தேர்வின் முதல்கட்ட தேர்வு நடந்தது. 2–வது கட்ட தேர்வு ஜுலை 24–ந் தேதி நடக்கிறது. முதல்கட்ட தேர்வு எழுதியவர்களும், 2–வது கட்ட தேர்வை எழுதலாம். ஆனால், முதல்கட்ட தேர்வு மார்க் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடக்கும் இந்த நுழைவுத்தேர்வை தமிழ், தெலுங்கு, மராத்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி மொழிகளிலும் நடத்த அனுமதிக்கவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.

தமிழ் உள்பட இந்த 6 மொழிகளிலும், தேர்வு நடத்த அனுமதி கிடைக்கும் என்பதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் சி.பி.எஸ்.இ. மாணவர்களும், கேந்திரிய வித்யாலயா மாணவர்களும் மட்டுமே எளிதாக வெற்றிபெறக்கூடிய பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் கேள்விகள் அமையும் என்ற நிலையில் இந்த ஆண்டு தமிழக மாணவர்களால் நிச்சயமாக எளிதில் தேர்வுபெற முடியாது. எதிர்காலத்தில் நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் வருகிற கல்வி ஆண்டில் இருந்து தமிழ்நாட்டிலும், உடனடியாக சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டங்களையும், கற்பிக்கும் முறைகளையும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு வகுக்கவேண்டும். இந்த ஆண்டு ஜுலை 24–ந் தேதி இந்த நுழைவுத்தேர்வு நடக்க இருக்கிறது. இதை இன்னும் சிறிது தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடப்படவேண்டும். இதற்கிடையில் இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வை எழுதுவதற்கான பயிற்சிகளையும், பயிற்சிவகுப்புகளையும், தமிழக அரசும், தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். நுழைவுத்தேர்வு முறையை ரத்துசெய்யவேண்டும் என்றால், பாராளுமன்றத்தில்தான் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றவேண்டும். அது மத்திய அரசாங்கத்தின் முடிவில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.