அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தேமு திக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஜனநாயக முறையில் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணி, புதிய வாக்காளர்கள், இளம் தலைமுறையினர், நடுநிலையாளர்கள் உள்ளிட்டோரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும், திமுகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சிகளும் பண வினியோகத்தில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
நள்ளிரவு வரை பண வினியோகத்தில் ஈடுபட்டதுடன், வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்களுக்கு பட்டப்பகலில் காவல்துறையினர் எதிரிலேயே பகிரங்கமாக பண வினியோகம் நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டனர்.
வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பெரும் பாலான இடங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. பல்வேறு இடங்களில் தேமுதிக வேட்பாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினரும் அவர்களுக்கு துணைபோனது கண்டனத்திற்கு உரியது. இதற்கு தேர்தல் ஆணையம் முழு ஒத்துழைப்பு அளித்து, அராஜகக்காரர்களை பாதுகாத்தது பொதுமக்களை மேலும் அச்சமடையச் செய்தது.
மேலும், தமிழகம் முழுவதுமே பண வினியோகம் நடைபெற்று வந்த நிலையில், அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப்பொருள் வினியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு திருமங்கலம், சங்கரன்கோயில், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வகையிலேயே மீண்டும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே, 19-ம் தேதிக்கு முன்பே இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment