தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனை மாற்றி விட்டு, அவருக்குப் பதில் புதிய ஆணையராக அசுதோஷ் சுக்லாவை நியமித்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகார்கள் கூறப்படும் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜே.கே. திரிபாதி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கூடுதல் டிஜிபியாக சி.சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காவல் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலர் அபூர்வ வர்மா ஆணையிட்டுள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சட்டசபைத் தேர்தலில் இதுவரை 30 காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் தேர்தலுக்கு இரண்டு வாரம் இருப்பதால், இந்த எண்ணிக்கை 50ஐத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment