திருப்பூரில் பிடிபட்ட ரூ570 கோடிக்கு எஸ்.பி. வங்கி உரிமை கோரியுள்ளதாகவும் உரிய விசாரணைக்குப் பின்னர் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி விஜயகுமார் தலைமையிலான படையினர் நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து வந்த 3 கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த லாரிகள் நிற்காமல் செல்லவே, லாரிகளை விரட்டிச் சென்று செங்கம்பள்ளி சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், கோவையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு எஸ்பிஐ வங்கிக்கு ரூ.570 கோடி பணம் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால், அதற்காக உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த கண்டெய்னர் லாரிகளைக் கைப்பற்றி மாவட்ட தேர்தல் அலுவலரான திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் கோவையில் இருந்து விஜயவாடா எஸ்பிஐ வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்திற்கான ஆவணங்களின் நகல்களே சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அந்த ஆவணங்களில் கூறப்பட்ட வாகன எண்ணுக்கும் பிடிபட்ட வாகன எண்ணுக்கும் வேறுபாடு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனால் திருப்பூர் வடக்கு, அவினாசி செலவினப் பார்வையாளராக உள்ள குடே ஸ்ரீனிவாஸ் ஐஏஎஸ் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயர்மட்டக் குழு விசாரணைக்குப் பிறகு பணத்தை திருப்பிக் கொடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தெரிவித்தார். இதனிடையே திருப்பூரில் பிடிபட்ட ரூ570 கோடிக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றும் தகவல்கள் வெளியாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிடிபட்ட பண லாரிகளைப் பார்வையிட பொதுமக்கள் சாரை சாரையாக வந்து சென்றதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த ரூ570 கோடி மர்மத்துக்கு தற்போது எஸ்.பி. ஐ. வங்கி உரிமை கோரியுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். இதன் மூலம் ரூ570 கோடி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து உயர்மட்ட குழு, எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்குப் பின்னர் வங்கியிடம் பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment