கூடுதலாக 52 வாக்குகள் பதிவான தென்காசி தொகுதி 56-வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தென்காசி நகராட்சிக்குட்பட்ட பொன்னமரன் நடுநிலைப் பள்ளியில் எண் 56, 57 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன. இதில் 56 ஆவது வாக்குச்சாவடிக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 972. அதில் 592 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் பதிவான மொத்த வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் திரையில் காட்டப்பட்டன. அப்போது 52 வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியதாக திரையில் தெரிந்தது.இதையடுத்து தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.டி.எஸ்.சார்லஸ், அதிமுக முகவர் சின்னத்துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரான வெங்கடேஷிடம் முறையிட்டனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொதுபார்வையாளர் ஆய்வு செய்தார்.
அப்போது மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான 52 வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு பொதுப் பார்வையாளர் பரிந்துரைத்துள்ளார்.இந்நிலையில்,தென்காசி தொகுதி 56-வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் வாக்காளர்கள் தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment