கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென, அக்கட்சியை சேர்ந்த விநாயகா ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்தார். மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில், மதிமுகவுக்கு கோவில்பட்டி உள்ளிட்ட 29 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்தார். இதையடுத்து மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவார் என வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இதனிடையே வைகோ இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. மீடியாக்கள் கோவில்பட்டியில் குவிந்திருந்தன. அதேபோல வைகோ மதியம் சுமார் 1 மணிக்கு, தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் தோரணையில் தொண்டர் படையோடு வந்தார். மீடியாக்களும், வைகோதான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்தி வெளியிட தொடங்கின. இந்நிலையில், வைகோ வேட்புமனுவை தாக்கல் செய்யாமல், அப்பகுதி மதிமுக நிர்வாகி விநாயகா ரமேஷை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். வைகோ கடைசி நேரத்தில் எடுத்த இந்த முடிவு மீடியாவினரை மட்டுமல்லாது, அவரது கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்தது. இதன்பிறகு தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி வைகோ இதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். தன்னை தோற்கடிப்பதற்காக, திமுகவை தற்போது ஆட்டுவித்துவருபவர், தேவர்-நாயக்கர் சமூக மக்களிடையே ஜாதி கலவரத்தை தூண்ட முயலுவதாகவும், அதற்கான அறிகுறிகள் வெளியாக தொடங்கியதாகவும், எனவே கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்ததாகவும் அறிவித்தார் வைகோ. மேலும், இந்த சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை எனவும், கூட்டணி வெற்றிக்காக உழைக்க போவதாகவும் வைகோ அறிவித்தார். இதனிடையே, வைகோ இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, திமுகவை குழப்பிவிட்டு, வரும் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை டேமேஜ் செய்ததை போலவும் ஆயிற்று, தனக்கு பப்ளிசிட்டி கிடைத்ததை போலவும் ஆகும் என்பது வைகோ கணக்காக இருக்கலாம் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment