Latest News

உறுதியாகிறது கூட்டணி... ஜி.கே. வாசனுடன் ம.ந.கூ.வின் வைகோ, திருமா, ஜி.ஆர்., முத்தரசன் சந்திப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தற்போது சந்தித்து பேசி வருகின்றனர். இச்ச=-ந்திப்பைத் தொடர்ந்து தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியில் த.மா.கா. அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசனின் த.மா.கா எந்த அணியில் இடம்பெறும் என்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. த.மா.கா.வை கூட்டணியில் சேர்க்க சம்மதித்த அ.தி.மு.க., அந்த கட்சிக்கு 8 தொகுதிகள்தான் தரப்படும் என்றது. அது மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, த.மா.கா.வையும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்.

ஆனால் இதை வாசன் ஏற்கவில்லை. தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிடுவோம். 25 முதல் 35 தொகுதிகள் வரை ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை அதிமுக ஏற்கவில்லை. இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்தது. த.மா.கா. நிலையை அறிந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வாசனை சேர்க்க முயற்சி செய்தார். த.மா.கா. கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தி.மு.க. அணியில் சேருவதற்கான கதவும் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் த.மா.கா. தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பாரதிய ஜனதா, தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், பா.ம.க. ஆகிய 3 அணிகளும் அழைத்தன. பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க வாசனும் த.மா.கா. தலைவர்களும் ஆர்வம் காட்டவில்லை.பா.ஜ.க., தே.மு.தி.க - மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்களிடம் வாசன் பேசினார். பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் வாசன் பேசியது த.மா.கா.வில் உள்ள சில மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. வாசனிடம் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வேறுவழியே இல்லாமல், தே.மு.தி.க - மக்கள் நலக்கூட் டணிக்கு போய் சேர வேண்டிய நிர்ப்பந்தமும் கட்டாயமும் வாசனுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனை தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா தலைமை அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து தேமுதிக-ம.ந.கூ கூட்டணியில் தமாகா அதிகாரப்பூர்வமாக இணையும் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.