Latest News

தேமுதிக - மநகூட்டணியில் இணைந்த வாசன்... தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஜி.கே. வாசன் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ளதற்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்தும், வெற்றி முழக்கமிட்டும் கோயம்பேடு அலுவலகத்திற்கு வந்த தலைவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து போட்டியிடுகின்றன. இதற்கான தொகுதி பங்கீடு மார்ச் 23ம் தேதி உறுதி செய்யப்பட்டது. யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தேமுதிக கூட்டணியில் தமாகாவும் இன்று இணைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு தமாகாவை தொடங்கிய ஜி.கே.வாசன், யாருடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்யாமல் இருந்து வந்தார். கூட்டணிக்கு வருமாறு வாசனை நேரில் சந்தித்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் வாசன் எந்தவித பதிலும் கூறவில்லை. கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி மட்டும் கூறினார். ஜெயலலிதாவின் அழைப்புக்காக வாசன் காத்திருந்த நிலையில், வியாழக்கிழமையன்று அதிமுக தரப்பில் இருந்து வாசனுக்கு திடீரென அழைப்பு வந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் அதிருப்தி அடைந்தார் வாசன். அதிமுக கூட்டணியில் இணையும் முடிவை கைவிட்டார். இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்த நிலையில், வாசனும் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் சேருவது என முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஜி.கே.வாசனை, மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். அரை மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க ஜி.கே.வாசன் மற்றும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை விஜயகாந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்தார் ஜி.கே.வாசன். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் தமிழ் மாநிலக்காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதற்கு தொண்டர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகளை வெடித்தும், உற்சாக முழக்கமிட்டும் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கோயம்பேடு அலுவலகம் கூட்டணித் தலைவர்களால் களைகட்டியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.