தேர்தல் தில்லுமுல்லுகளைத் தடுக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருக்கும் உள்ளது என்றார் சகாயம் ஐஏஎஸ். இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணைய தலைமுறை. கல்லுாரி தேர்தல் சம்பந்தப்பட்ட கருவை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார், மனிஷாஜித் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. சகாயம் ஐஏஎஸ், இயக்குநர்கள் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாடல் வெளியீட்டுவிழாவில் சகாயம் பேசுகையில், "இணைய தலைமுறை படத்தை தயாரித்தவர் இளந்திருமாறன். இளைஞர்கள் இந்தபடத்தை தமிழ் சமூகத்திடம் எடுத்துசெல்ல வேண்டும். 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கணினித் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் குதித்தார்கள். 'நாம் நம்பியிருக்கும் தலைவர்கள் தேசத்துக்கு, நம் மேம்பாட்டுக்கு உழைப்பார்கள் என்று நம்பி ஆதரவு தருகிறோம். ஆனால், அவர்கள் தங்களை வளப்படுத்தவே கவனம் செலுத்துகிறார்களே' என்று ஊழலுக்கு எதிராக கோபம் கொண்ட இளைஞர்கள் அவர்கள். அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர் இளந்திருமாறன். நாம் பிறந்த இந்த சமூகத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அக்கறையில் பணியாற்றினார். அப்போது நான் அந்தப் பகுதியில் குடியிருந்தேன். கலால்துறையில் பணியாற்றினேன். இளந்திருமாறனை பார்த்தது கூட இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக களம் இறங்கியவர் என்ற காரணத்தினால் நானும், என் மனைவியும் அவருக்கு ஓட்டுப் போட்டோம். அவர் வெற்றிபெறுவாரா? டெபாசிட் வாங்குவாரா என்றெல்லாம் நினைக்கவில்லை. ஊழலுக்கு எதிராக நிற்பதால் ஓட்டு போட்டேன். 2011ல்தான் இவரைச் சந்தித்தேன். 2009ல் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு பின் நான் மனதளவில் நொந்துபோய் இருந்தேன். தொன்மை, வரலாறு வாய்ந்த தமிழ்ச் சமூகம் ஈழத்தில் 2 லட்சம் பேரை இழந்து இருந்தது. 21 நுாற்றாண்டில் எந்த சமூகமுமும் சந்திக்காத இழப்பைச் சந்தித்த. அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள்,விஞ்ஞானிகள், படைப்பாளிகள் இருந்தார்கள். ஆனால், நல்ல தலைவர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டேன். பல ஆயிரம் பெண்கள், அப்பாவி குழந்தைகள் பலநாடுகளில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசியதால் கருகினார்கள். கேட்க நாதி இல்லை. அப்போது கொதித்துப் போனேன். அது வெறி அல்ல, நெறி. நேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்ல, லஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான். பின்னர் ஒரு கட்டத்தில் பேசிய இளந்திருமாறன் உங்கள் வங்கி கணக்கில்பணம் இல்லை என்று தெரியும். நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உங்கள் பணியை விட நேரிடும். 8 ஆண்டுகள் சம்பளம் கிடைக்காது. அந்த 8 ஆண்டுக்கான உங்கள் சம்பளத்தை எத்தனை லட்சமாக இருந்தாலும் நான் தருகிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. ஒரு நாட்டிலே வேளாண்மை, கல்வி மாதிரி அரசியலும் ஒன்று. சமூகத்தை துாய்மைப்படுத்தினால் அரசியலும் துாய்மை ஆகிவிடும் என்றேன். இளந்திருமாறன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். மாணவர்கள் என்றாலே ஒருவிதமானவர்கள் என்று நினைக்கலாம். அவர்கள் குறும்பு மிக்கவர்கள். அவர்களிடம் அளப்பறிய சக்தி இருக்கிறது. அவர்கள் கல்லுாரித் தேர்தலைப் பற்றி, அங்கே நடக்கிற தில்லுமுல்லு பற்றி இந்தப் படம் பேசுகிறது. மாணவர் தேர்தல் தில்லு முல்லு மட்டுமல்ல, மாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லு முல்லுகளை தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. கல்வி வணிக மயம், கல்விமுறை, குழந்தைகள் மீது பெற்றோர்களின் ஆசை திணிப்பு பற்றிய அப்பா என்ற படத்தை இயக்குநர் சமுத்திரகனி எடுத்திருக்கிறார். இந்த மாதிரி படங்கள் வெற்றி அடைய வேண்டும்," என்றார் சகாயம்.
No comments:
Post a Comment