Latest News

  

மருத்துவ நுழைவுத் தேர்வும், பறிபோகும் மாநில உரிமைகளும்!


நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வுதான் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 28 ம் தேதியன்று தீர்ப்பளித்து விட்டது. இந்தாண்டு முதலே இது நடைமுறைக்கும் வருகிறது. இதன்படி மே 1 ம் தேதியும், ஜூலை 24 தேதியும் தேர்வுகள் நடக்க வேண்டும். நுழைவுத் தேர்வை கேட்ட மாநிலங்களில் மே 1 ம் தேதியும், தேர்வு வேண்டாம் என்று கூறிய மாநிலங்களின் வசதிக்காக ஜூலை 24 ம் தேதியும் தேர்வு நடக்கிறது.

மருத்துவக் கல்வியின் தரம் மிகவும் குறைந்து விட்டதென்று கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த போதுதான் இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஏற்கனவே 2013 ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு சட்டப்படி செல்லாதென்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தாண்டு ஏப்ரலில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த உத்திரவை திரும்பப் பெற்றுக் கொண்டு நுழைவுத் தேர்வுக்கு அனுமதி வழங்கியது. தற்போது மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) சிபிஎஸ்ஈ ஆகியவையும், மற்றும் பல மாநிலங்களும் நுழைவுத் தேர்வை ஆதரித்தன. தமிழகம், கேரளம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்தன. ஆனால் எதிர்ப்புகள் புறந்தள்ளப்பட்டு தற்போது இந்தியா முழுமைக்கும் எந்த மருத்துவக் கல்லூரியில் சேருவதாக இருந்தாலும், அதாவது மாநில அரசுகள், மத்திய அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ராணுவம் நடத்தும் எந்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதானாலும் இந்த நுழைவுத் தேர்வுதான் ஒரே தேர்வாகும். இதனால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த 90 விதமான தேர்வுகள் செல்லாதவையாகின்றன. இந்த உத்திரவால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம்தான். காரணம் 2006 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தொழிற்கல்வி சேர்க்கை முறைப்படுத்துதல் சட்டத்தின்படி தமிழகத்தில் 2007 ம் ஆண்டு முதல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடக்கிறது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதால், நேற்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தை கட்டுப்படுத்தாது என்று திமுக வும், சில சட்ட நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதற்குமான தீர்ப்பு என்பதால் தமிழகம் இதிலிருந்து தப்ப முடியாதென்று வேறு சிலர் வாதிடுகின்றனர். இதனிடையே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வெள்ளிக் கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்தாண்டு தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. மே 1 ம் தேதி தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமையில் அப்பட்டமாக தலையிடுவதாகும் என்று கூறுகிறார் சமூக சமுத்துவத்துக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத். "இது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும். மத்திய அரசு கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். கல்வியும், சுகாதாரமும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சட்டத்திற்கு மாற்றாக வந்துள்ள இந்த தீர்ப்பு அப்பட்டமாக மாநில உரிமைகளில் தலையிடுவது மட்டுமல்ல, இது நிச்சயமாக அதீதமான நீதி மன்ற தலையீடு (judicial over reach). அதே சமயம் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை வெறும் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் நடைபெற முடியாது. நுழைவுத் தேர்வுகள் அவசியம்தான். அது மாநில அரசால் நடத்தப் பட வேண்டும்,'' என்கிறார் ரவீந்திரநாத். தமிழ் நாட்டில் மே மாதம் அமையவிருக்கும் புதிய அரசுக்கு எடுத்த எடுப்பிலேயே பெரியதோர் தலைவலி காத்திருப்பது கண்கூடாகவே தெரிகின்றது. இதனிடையே 12 ஐந்தாவது திட்டத்துக்கான சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் கொள்கை வகுப்பிற்காக உருவாக்கப் பட்டிருக்கும் 31 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு இந்திய மருத்துவ கவுன்சிலில் (என்சிஐ) நிலவும் பூதாகரமான ஊழல்தான் இந்தியாவில் மருத்துவ சேவைகளும், மருத்துவ கல்வியும் படு மோசமாக இருப்பதற்கு காரணமென்று சமீபத்தில் தெரிவித்துள்ளது. 1. மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி மற்றும் ஆய்வில் (inspection) பெரிய தொகை கை மாறுகிறது. 2. நாட்டில் ஆண்டுதோறும் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் 3. 70 கோடி மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு (specialist care) வாய்ப்பு இல்லை. 4. 80 சதவிகித சிறப்பு மருத்துவர்கள் நகர்ப்புறங்களில்தான் உள்ளனர். 5. மருத்துவ துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக ஜூலை 2014 ல் என்டிஏ அரசு நியமித்த பேராசிரியம் ரன்ஜித் ராய் சவுத்திரி கமிட்டியின் அறிக்கை உடனே அமல் படுத்தப் பட வேண்டும். 6. எம்சிஐ க்கு மாற்றாக தேசீய மருத்துவ ஆணையகம் (National Medical Commission) ஒன்று ஏற்படத்தப் பட வேண்டும், ஆனால் எந்தளவுக்கு இந்தப் பரிந்துரைகள் செயற்படுத்தப் படும் என்று தெரியவில்லை. அரசியல் வாதிகள் அடிக்கும் கொள்ளையின் முக்கியமான வடிகாலாக இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் சீர்திருத்தங்கள் அவ்வளவு சுலபமல்லதான். இந்த பின்புலத்தில் பார்த்தால் நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெரியதாக எந்த மாற்றமும் வரப் போவதில்லை என்பதே எளிய உண்மை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.