மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உதயமான சட்டப்பேரவை தொகுதி மடத்துக்குளம். பழைய உடுமலை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட தொகுதி இது. உடுமலை ஒன்றியப் பகுதியில் உள்ள 35 ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த முறை நடந்த முதல் தேர்தலில் 19 ஆயிரத்து 669 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை, அதிமுகவை சேர்ந்த சி.சண்முகவேலு வென்ற தொகுதி. முன்னாள் அமைச்சராகவும், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த சி.சண்முகவேலுக்கு ‘சீட்’ தராமல் உடுமலை வழக்கறிஞர் கே.மனோகரனுக்கு வாய்ப்பு அளித்துள்ளது கட்சித் தலைமை.
மடத்துக்குளம் அதிமுகவில் பல் வேறு அதிருப்திகளும் நிலவுகின்றன. ‘எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜா., ஜெ., என அணி பிரிந்த போது திருநாவுக்கரசுடன் சேர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை முடக்க முயன்றார். கட்சிக் கொடியையும், நமது எம்ஜிஆர் நாளிதழையும் எரித்தார், என அந்த அதிருப்தியாளர்கள், வேட்பாளர் மீது புகார் போர் நடத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அதிருப்திகளை முறியடிக்கும் விதமாக தற்போதைய எம்.எல்.ஏ., சி.சண்முகவேலுவையும் உடன் அழைத்து சென்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக களத்தில் இறங்கியிருக்கும் இரா.ஜெயராமகிருஷ்ணன், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து. துங்காவி ஊராட்சித் தலைவர், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் என பதவிகளுக்கு வந்தவர், வழக்கறிஞர். உள்ளாட்சிப் பதவிகளில் தொடர்ந்து இருந்ததால் தேர்தல் பிரச்சார அனுபவமும், மக்களிடம் அறிமுகமும் இவருக்கு இருக்கிறது. விடியல் மீட்புப் பயணத்தின்போது இப் பகுதியில் பிரச்சாரம் மேற் கொண்ட மு.க.ஸ்டாலின், தற்போது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத் தையும் ஜெயபாலகிருஷ்ணனை முன்னிறுத்தி நடத்தியிருப்பது திமுக தொண்டர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளராக வழக்கறிஞர் மகேஸ்வரி களத்தில் உள்ளார். கோவையை சேர்ந்தவர். கோவை மேற்கு தொகுதியில் 2001-ல் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவர். தொடர்ந்து 2006-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். காங்கிரஸில் இருந்தபோது மகிளா காங்கிரஸின் அகில இந்திய துணைத் தலைவர், மாநிலத் தலைவராக பொறுப்புகளை வகித்தவர். தொகுதியின் உடுமலை யைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒரு வருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்ட நிலையில் இவருக்கு தமாகாவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த வர். உடுமலை, மடத்துக்குளத்தில் கணிசமான அளவில் இச் சமூகத்தவர்கள் உள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நாயுடு சமூகத்தவர்களின் வாக்குகளை மகேஸ்வரி எளிதாகப் பெற வாய்ப்பு உண்டு என்று கணக்கிட்டே இவர் களமிறக்கப்பட்டுள்ளதாக கட்சிக்குள் பேச்சு உள்ளது.
பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இருப்பினும் திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி இடையேதான் மும்முனை போட்டி ஏற் பட்டுள்ளது.
No comments:
Post a Comment