மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 முஸ்லிம் இளைஞர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 செப்டம்பர் மாதம் ஹமிதியா மசூதி அருகே நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தரப்பிலும் 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கு மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான ஷபீர் அகமது சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். என்ஐஏவின் அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நூருல் ஹூடா சம்சுதோகா, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது ரஜப் அலி மன்சூரி, சல்மான் பர்ஸி அப்துல் லத்திப் அய்மி, பரூக் இக்பால் அகமது மக்டுமி, முகமது அலி ஆலம் ஷேக், ஆசிப் கான் பசீர் கான் (எ) ஜுனைத், முகமது ஜாஹித் அப்துல் மஜித் அன்சாரி மற்றும் அப்ரார் அகமது குலாம் அகமது ஆகிய 9 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ இம்தியாஸ் ஜலீல், 9 முஸ்லிம்களைக் கைது செய்து அவர்களின் வாழ்க்கையை அழித்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நன்றி : http://kaalaimalar.net/after-5-years-in-jail/
No comments:
Post a Comment