வரலாறு தெரியாமல் இப்படி உளறுவதை நிறுத்த வேண்டும் என்று பிரேமலதாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சமீப காலமாக கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. முதலில் எம்.ஜி.ஆர். பேச்சை கிண்டலடித்து வந்தார். தற்போது நெல்லை மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் சதாம் உசேன் குறித்துப் பேசி முஸ்லீம்களின் அதிருப்தியை தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் பிரேமலதா. அதுவும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் பகுதியில் அவர் சதாம் உசேனின் வரலாறு தெரியாமல் தப்பும் தவறுமாக, அறுவெறுக்க வைக்கும் வகையில் பேசியதை பலரும் ரசிக்கவில்லை.
சதான் உசேன் நிலை... பிரேமலதா பேசுகையில், 'சதாம் உசேன் நிலைமை என்னவானது? பதுங்கு குழிக்குள் பல்லுடைந்து பதுங்கி இருந்த கோரமுகத்தை கொண்ட சதாம் உசேனை, ஆணவத்தின் உச்சியில் இருந்த அவனை பிடித்து இழுத்து வந்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி கேவலமான மரணத்தை கொடுத்ததை இந்த உலகம் மறந்திருக்காது. அதை ஆணவத்தில் இருக்கும் தலைவர்கள் அறியவில்லையா? உங்களுக்கும் இதே நிலைமை தான் ஏற்படும்' என்றார் பிரேமலதா.
வரலாறு கூடவா தெரியாது இவருக்கு? இதைக் கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேமலதா இப்படி வரலாற்றை தவறாக சித்தரித்துப் பேசியதா இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்து வருகின்றன. சதாம் உசேன் எப்படி மரணத்தைச் சந்தித்தார் என்பது கூட பிரேமலதாவுக்குத் தெரியவில்லையே என்று பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
தவ்ஹீத் எச்சரிக்கை... இதுகுறித்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவரான குறிச்சி சுலைமான் ஒரு இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "வரலாறு என்ன என்பது கூட தெரியாமல் வாய்க்குவந்ததை எல்லாம் பிரேமலதா பேசிக் கொண்டிருக்கிறார். வரலாறாக வாழ்ந்து மறைந்தவர் சதாம். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டுக்கு பெரும் சவாலாக விளங்கியவர். கடைசி வரையிலும் அமெரிக்காவின் சர்வாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிச்சலுடன் போர்க்களத்தை எதிர்கொண்டவர்.
தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்... கடைசியில் அமெரிக்காவின் போலியான நீதிமன்ற விசாரணையையும், வழக்கறிஞர் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடி எதிர்கொண்டார். அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனையையும் புன்முறுவலுடன் எதிர்கொண்டு துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். ஆனால், இந்த வரலாறு எதுவுமே தெரியாமல், பல் உடைக்கப்பட்டு கேவலமாக கொல்லப்பட்டதாக பிரேமலதா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் பொறுப்பற்ற முறையில் பொது இடத்தில் பேசுவதை பிரேமலதா போன்ற அரசியல் தலைவர்கள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment