அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டைத் தொடர்ந்து கரூரை அடுத்த அதியமான் கோட்டை என்ற கிராமத்தில் மேலும் ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புநாதன் வீட்டில் கிடைத்த தகவலின் பேரில் மணிமாறன் வீட்டில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி அன்புநாதன் என்பவர் தொழிலதிபர். இவர், ஓ.பி.எஸ்க்கு நெருக்கமான நண்பர். சில மாதங்களாக அடிக்கடி அன்புநாதனும், கரூர் மாவட்ட செயலாளராக இருந்த விஜயபாஸ்கரும் சந்தித்துப் பேசினார்களாம். அந்தச் சந்திப்பு பற்றியும் ஜெயலலிதாவிற்கு தகவல் போகவே, விஜயபாஸ்கரின் கட்சிப் பதவியை பறித்தார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் விஜயபாஸ்கர். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு நெருக்கமான அன்புநாதன் வீட்டில்தான் இப்போது வருவாய்த் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் ரெய்டு நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். காண்ட்ராக்டர், கோழிப் பண்ணை அதிபர் என்று வெளியில் காட்டிக்கொண்டாலும் அமைச்சர்கள் இருவருக்கு நெருக்கமாக இருந்தாராம் அன்புநாதன். அன்பு நாதன் வீட்டுக்கு கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி ஆம்புலன்ஸ் ஒன்று வருவதும் போவதுமாக இருந்திருக்கிறது. அன்பு வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா? என முதலில் சந்தேகம் வந்திருக்கிறது. ஆனால், ஒரு ஆம்புலன்ஸ் அவரது வீட்டிலேயே நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்தவே வாட்ஸ்அப்பில் தகவல் வெளியானது. தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ளது கரூர். திருச்சி, சேலம், ஈரோடு என்று தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கான மையமாகவும் இருப்பது கரூர்தான். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வது எளிது. அதிமுக விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்த பணத்தை அன்புநாதன் வீட்டில் வைத்து, அங்கிருந்து சுற்று வட்டார மாவட்டங்களுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கலாம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கடத்தல்
ஆம்புலன்ஸில்தான் பணத்தை அன்புநாதன் வீட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் வழியாகவே வெளியில் கொண்டு போயிருக்கிறார்கள். அதுவும், சில நாட்களில் இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் மட்டும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் போகவே அதிரடியாக சோதனை செய்து பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஆவணங்கள் சிக்கின
அன்புநாதன் வீட்டில் இன்று நடத்திய சோதனையில் ஏராளமான நிலங்கள் வாங்கியது பற்றிய ஆவணங்களும் சிக்கின. நில ஆவணங்களை வருமான வரித்துறை மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. வருமான வரித்துறை சிறப்புக்குழு கரூர் மாவட்டத்தை கண்காணிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரியில் சோதனை
கரூர் அருகே குன்னம்சத்திரத்தில் அன்னை மகளிர் கல்லூரியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அன்புநாதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியிலும் பணம் பதுக்கல் என்ற தகவலின் பேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு பிரமுகர் வீட்டில் சோதனை
இதனிடையே கரூர் அருகே அதியமான் கோட்டை என்ற இடத்தில் மற்றொரு அதிமுக பிரமுகர் மணிமாறன் என்பவரின் வீட்டிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டை திறக்கச் செய்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
நாளை அறிவிப்பு
இதனிடையே கரூரின் நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்பது நாளை அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment