கோடீஸ்வரரான தொழில் அதிபர் விஜய் மல்லையா ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான ரூ.6 ஆயிரம் படியை கூட விடாமல் வாங்கியது தெரிய வந்துள்ளது. 17 வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காத தொழில் அதிபர் விஜய் மல்லையா ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். முதல் முறையாக அவர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளின் ஆதரவோடு 2002ம் ஆண்டில் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் அவர் மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது முறை அவர் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளின் ஆதரவோடு ராஜ்யசபாவுக்கு தேர்வானார். அவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த சமூக ஆர்வலரான முகமது காலித் ஜீலானி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விஜய் மல்லையா எம்.பி.களுக்கான படியை பெறுகிறாரா என்று கேட்டு விண்ணப்பித்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது,
மல்லையா தனது விமான பயணங்களை தவிர மற்ற அனைத்திற்கும் எம்.பி.களுக்கு அளிக்கப்படும் படியை பெற்றுள்ளார். 2010ம் ஆண்டு ஜூல மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அவர் அலுவலக செலவுக்காக மாதம் ரூ.6 ஆயிரம் பெற்றார். அலுவலக தொலைப்பேசியில் பேசியதாகக் கூறி அவர் ரூ.1.73 லட்சத்திற்கான பில்லை அளித்தார். அவர் நீர், மின்சாரம் மற்றும் மருத்துவ செலவுக்களுக்கான பில்லை சமர்பித்து பணம் பெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடி, கோடியாய் பணம் வைத்து ராஜா போன்று வாழும் மல்லையா இப்படி எம்.பி.களுக்கான படியை தவறாமல் வாங்கியது அதிர்ச்சி அளிப்பதாக ஜீலானி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment