Latest News

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட லலித் மோடி, மல்லையா ஆகியோர் இன்னும் வெளிநாடுகளில் இருப்பது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் இன்னும் வெளிநாடுகளில் இருப்பது ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரம்
சட்டசபை தேர்தல் நடைபெறும் அசாமில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். திக்போய், மொரான் மற்றும் தேஜ்பூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

திக்போய் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி அப்போது கூறியதாவது:–

குட்டி இந்தியா
அசாமில் அமைதியை மீண்டும் கொண்டு வந்தது காங்கிரசின் மிகப்பெரும் சாதனை. இது எங்களின் மதிப்பீடு அல்ல. மக்களுடன் நான் நடத்தும் வழக்கமான கலந்துரையாடலின் போது, அவர்கள் கூறியதன் மூலம் அறிந்து கொண்டதுதான் இவை. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தியதற்கான பலனை காங்கிரசுக்கு மக்கள் அளித்துள்ளனர்.

பல்வேறு இனம், மதம் மற்றும் கலாசாரங்களை கொண்ட அசாம் மாநிலம் ஒரு குட்டி இந்தியாவை போன்றது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் தங்கள் சொந்த சித்தாந்தங்களை பரப்பி இத்தகைய வேற்றுமையை சீர்குலைக்கின்றன.

பா.ஜனதாவால் ஆபத்து
வளர்ச்சியை பற்றி பேசும் பா.ஜனதா எங்கெல்லாம் ஆட்சிக்கு வந்துள்ளதோ, அங்கு மக்களுக்கிடையே சண்டையை உருவாக்குகிறது. அந்தவகையில் பா.ஜனதாவால் அசாமுக்கு மிகப்பெரும் ஆபத்து உள்ளது. அந்த கட்சி இங்கு ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படும்.

பா.ஜனதா–அசாம் கணபரிஷத் கூட்டணி அசாமை 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு சென்று விடும். அந்த காலகட்டத்தில் வன்முறையால் உயிரிழப்பு உள்ளிட்ட சோக நிகழ்வுகளே அசாமில் நிறைந்திருந்தது.

கருப்பு பண விவகாரம்
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியர்களின் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வீதம் செலுத்தப்படும் என மோடி வாக்களித்தார்.

அப்படியானால் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோர் இன்னும் வெளிநாடுகளில் இருப்பது ஏன்? கருப்பு பணத்தை மீட்பது மட்டுமின்றி, இங்கு மோசடியில் ஈடுபட்டவர்களை நாட்டை விட்டு வெளியேறவும் மத்திய அரசு அனுமதித்து விட்டது.

பிரதமரின் ‘செல்பி’
‘இந்தியாவில் தயாரிப்போம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் இந்த திட்டங்களின் கீழ் எந்தவொரு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை.

செல்வந்தர்கள், கோடீஸ்வரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட ‘செல்பி’ புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஏழையோ அல்லது ஒரு விவசாயியுடனோ அவர் இருப்பது போன்ற எந்த புகைப்படமும் வெளியானதில்லை.

ஆனால் ஏழைகளின் முன்னேற்றம் தொடர்பாக அவருக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து அவரது பார்வையை ஏழைகள் பக்கம் திருப்ப தொடர்ந்து வலியுறுத்தும்.

10 லட்சம் வேலைவாய்ப்பு
அசாமில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், அனைத்து அரசுப்பணி காலியிடங்களும் நிரப்பப்படும்.

அனைத்து கோட்டங்களிலும் விவசாய நில வங்கி மற்றும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே காங்கிரஸ் கட்சி இங்கு மீண்டும் ஆட்சியமைக்க வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.