கொல்கத்தாவில் கட்டுமான பணி நடந்துவந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியானார்கள். சுமார் 60 பேர் காயம் அடைந்தனர்.
பாலம் இடிந்தது
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் புர்ரா பஜார் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு பெரிய பாலம் கட்டும்பணி 2009–ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இந்த இடம் கொல்கத்தாவின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்கி வருகிறது. ஏராளமான மொத்த வியாபார நிறுவனங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. அதோடு இது நகரின் மிகவும் நெரிசலான பகுதியும் ஆகும்.
ரவீந்திர சாரனி – விவேகானந்தா ரோடு இடையில் உள்ள பகுதியில் இந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று பகல் 12.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ், ஏராளமான கார்கள், டாக்சிகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன.
18 பேர் பலி
பஸ் பயணிகள், பொதுமக்கள், பாலம் கட்டுமான தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இடிபாடுகளை அகற்றுவதற்காக பொக்லைன், கிரேன் உள்பட பல நவீன எந்திரங்களும் வரவழைக்கப்பட்டன.
வாகனங்கள், கான்கிரீட்டுகள், இரும்பு தூண்கள் போன்றவற்றுக்கு கீழே சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த விபத்தில் இதுவரை 18 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டனர். 60 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களிலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி தவித்தனர்.
ராணுவம் தீவிரம்
இதைத் தொடர்ந்து மீட்பு பணிக்கு ராணுவத்தின் மீட்பு பிரிவை சேர்ந்த 4 குழு (300 வீரர்கள்) அவசரமாக வரவழைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 2 ஆம்புலன்ஸ், டாக்டர், நர்சுகள், ஒரு ராணுவ அதிகாரி அடங்கிய 3 மருத்துவ குழுக்களும் இடம்பெற்றுள்ளது.
இடிபாடுகளை அகற்றும் பணியில் ராணுவத்தின் என்ஜினீயர் குழுவினரும் நவீன கருவிகளுடன் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ரூ.5 லட்சம் உதவித்தொகை
தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். அவசர உதவிக்கு 1070 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் உதவித் தொகையை மாநில தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அந்த மாநிலத்தில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு அங்கு விரைந்து வந்தார்.
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், மீட்பு பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று மீட்பு படையினரை துரிதப்படுத்தினார்.
பிரதமர் மோடி அதிர்ச்சி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி விபத்து பற்றி அறிந்ததும் வருத்தம் தெரிவித்து உள்ளார். ‘கொல்கத்தாவில் கட்டுமான பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததை அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள அதிகாரிகளை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு, இந்த விபத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்புவது உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் மோதல்
மேற்குவங்காள மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பேரிடர் மீட்பு படை டைரக்டர் ஜெனரல் ஓ.பி.சிங்கை தொடர்பு கொண்டு, கூடுதல் படையினரை அனுப்பி இடிபாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்க உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த விபத்து குறித்து திரிணாமுல் காங்கிரஸ் அரசும், முந்தைய கம்யூனிஸ்டு அரசும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுள்ளது. முந்தைய கம்யூனிஸ்டு ஆட்சியின்போது தான் இந்த பாலம் கட்டத் தொடங்கப்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு இந்த ஆட்சியில் தான் பாலம் இடிந்துள்ளதாக கம்யூனிஸ்டும் பதிலடி கொடுத்து உள்ளது.
சி.பி.ஐ. விசாரணை தேவை
பா.ஜனதா இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தாவுக்கு விரைந்துவந்த மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘‘இந்த பாலம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதையே இது காட்டுகிறது. எனவே இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
கடவுளின் செயல்
இதற்கிடையே, பாலத்தை நிறுவும் ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் இந்த விபத்து பற்றி கூறும்போது, ‘‘ இது கடவுளின் செயல் அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை’’ என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment