தேர்வுக்கு நன்றாக படிக்கும்படி தாய் கண்டித்ததால் 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த தாயும், தற்கொலை செய்து கொண்டார்.
10–ம் வகுப்பு மாணவி
சென்னை விருகம்பாக்கம் அப்துல்லா நகர், பவானி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 40). இவர், சினிமா துறையில் உடைகள் தைக்கும் தையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(35). இவர்களுக்கு ராஜேஸ்வரி(15) என்ற மகளும், 5 வயதில் மற்றொரு மகளும் இருந்தனர்.
ராஜேஸ்வரி, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு பொதுத்தேர்வுக்கு நன்றாக படிக்கும்படி தனது மகள் ராஜேஸ்வரியை கவிதா கண்டித்ததாக கூறப்படுகிறது.
தாய்–மகள் தற்கொலை
இதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கவிதா, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தேர்வுக்கு நன்றாக படிக்கும்படி தான் கண்டித்ததால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற வேதனையில் கவிதா, வீட்டின் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினரிடம் கூறினாள்
வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த கவிதாவின் 5 வயது மகள் வீட்டுக்குள் சென்ற போது தனது தாய் மற்றும் அக்கா இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து விட்டு அக்கம் பக்கத்தினரிடம் சென்று தனது தாயும், அக்காவும் மேலே தொங்கிக்கொண்டு இருப்பதாக கூறினாள்.
அவள் சொல்வது புரியாமல் அக்கம் பக்கத்தினர் கவிதா வீட்டுக்குள் சென்று பார்த்த போதுதான் தாயும், மகளும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கும், வேலைக்கு சென்று இருந்த கவிதாவின் கணவருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், தற்கொலை செய்து கொண்ட தாய்–மகள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தாய்–மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment