கல்லூரி மாணவி மர்மச்சாவு குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சோழகநகரை சேர்ந்தவர் கணபதி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
உடல்நிலை மோசம்
என்னுடைய மகள் சுபா, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி பி.சி.ஏ. படித்து வந்தார். கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு 29–ந் தேதி விடுதி வார்டன் எனக்கு போன் செய்து, உங்கள் மகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள்’ என்றார்.
அதிர்ச்சியடைந்த நானும் என் மனைவியும் உடனே சென்னை புறப்பட்டோம். வழியில் சிட்லப்பாக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் போன் செய்து, உடனே போலீஸ் நிலையம் வாருங்கள் என்றார்.
போலீஸ் மிரட்டல்
நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்றதும், அங்கிருந்த இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோர் என்னை மிரட்டி பல வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் கல்லூரி ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் என் மகளின் மாற்றுச்சான்றிதழை (டி.சி.யை) என்னிடம் வழங்கினார்கள்.
மறுநாள் மதியம் எங்களை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உன் மகள் இறந்துவிட்டாள். அவளது உடல் இந்த ஆம்புலன்சில் உள்ளது. எந்த பிரச்சினையும் செய்யாமல், ஊர் போய் சேரவேண்டும். இல்லையென்றால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும். உன் மகளை புதைக்க கூடாது. எரிக்கத்தான் வேண்டும் என்று போலீசார் மிரட்டி எங்களை அந்த ஆம்புலன்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், என் மகளின் உடலை புதைத்துள்ளோம்.
நடவடிக்கை தேவையில்லை
பின்னர் என் மகள் சாவு குறித்து சித்தலப்பாக்கம் போலீசார் பதிவு செய்த வழக்கு ஆவணங்களை பார்த்தபோது, நான் என் மகளை கட்டாயப்படுத்தி பி.சி.ஏ. படிக்க வைத்ததாகவும், அந்த படிப்பை படிக்க விருப்பம் இல்லாத என் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், இதுபோன்ற வழக்கில், தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர் மூலம் விசாரணை நடத்தவேண்டும். ஆனால், அவர்களுக்கு இந்த வழக்கின் விவரங்கள் குறித்த தகவலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவிக்கவே இல்லை. மேலும், என் மகள் மர்ம சாவு குறித்த வழக்கில், மேல் நடவடிக்கை தேவையில் இல்லை என்று கூறி வழக்கை முடித்து, சம்பந்தப்பட்ட குற்றவியல் கோர்ட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கையும் தாக்கல் செய்து விட்டார்.
மறு விசாரணை
இந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மொத்ததில், என் மகள் சாவில் மர்மம் உள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து சித்தலப்பாக்கம் போலீசார் இதை மூடி மறைக்கின்றனர். எனவே, என் மகள் சாவு குறித்த மறு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனர், சித்தலபாக்கம் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment