பொருளாதார ரீதியாக நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதனை படேல்கள் சமூகம் நிராகரித்துள்ளது. குஜராத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல் சமூகத்தினர் ஹார்திக் படேல் தலைமையில் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடத்திய போராட்டத்தால் பெரும் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் குஜராத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு மாநில சட்டசபை தேர்தலும் வர இருக்கிறது.
இதனால் படேல் சமூகத்தைத் திருப்திபடுத்தும் வகையில் அதிரடியாக பொருளாதார ரீதியாக நலிவடைத உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல், மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற மாநில பாஜக உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் குஜராத் அரசு அறிவித்துள்ள 10% இடஒதுக்கீட்டை ஹார்திக் படேல் தலைமையிலான அமைப்பு நிராகரித்துள்ளது. படேல் சமூகத்தினரை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று போராடி வரும் தங்களுக்கு லாலிபாப் கொடுத்து ஏமாற்ற அரசு முயற்சிப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரத்தில் இடஒதுக்கீடு கோரி போராடி வரும் மற்றொரு அமைப்பான சர்தார் படேல் குழுவினர், குஜராத் அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment